மு.க.அழகிரி சவால் பற்றி ஸ்டாலின் கவலைப்பட வேண்டும்: இல.கணேசன்
மு.க.அழகிரி திமுகவிற்கு சவால் விட்டுள்ளது குறித்து மட்டுமே திமுக தலைவர் ஸ்டாலின் கவலைப்பட வேண்டும். அதை விட்டு சசிகலா வருகை குறித்து சிந்திக்க வேண்டாம் : பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தூத்துக்குடியில் பேட்டி;
தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல்பணி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் தலைமைதாங்கி கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பாரதிய ஜனதா தனது தேர்தல் பணிகளை முறையாக தொடங்கியிருக்கிறது. அதில் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் தேர்தலுக்காக மட்டுமே தனி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. பாஜகவை பொறுத்தவரையில் அகர முதல எழுத்தெல்லாம் அமைப்பு முதற்றே பிஜேபி என்பதாகும். எனவேதான் அமைப்புகளில் தேர்தல் பணி குறித்து ஆய்வு செய்வதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பிஜேபி கூட்டணி அமைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மற்ற எந்த காரணத்திற்காகவும் இந்த கூட்டணி பிரியாது. இன்றைக்கு சசிகலா வருகையினால் அதிமுகவில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும், இனி நடக்க வேண்டியது தானாக நடக்கும் என சொல்வது திமுக தலைவர் ஸ்டாலின் போன்ற பக்குவப்பட்ட அரசியல்வாதிக்கு அழகல்ல. ஒரு கட்சியை சேர்ந்தவர் வெளிவரும் பொழுது தன்னுடைய ஆதரவாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி வரவேற்பு அளிக்கிறார்கள். இதை இந்த மாற்றத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இன்றைய பொழுதில் மு.க. அழகிரி, ஸ்டாலினுக்கு சவால் விடுத்து இருக்கிறார். எனவே அதைப் பற்றி தான் அவர் கவலைப்பட வேண்டும். அதைவிட்டு சசிகலா வருகையால் அதிமுகவில் மாற்றம் நடக்கும் என நினைத்து மனப்பால் குடிப்பது பொருந்தாது. சசிகலா வருகை குறித்து சிந்திக்க வேண்டியது அதிமுக கட்சி மட்டுமே என்றார்.
பேட்டியின் போது பாஜக மாவட்ட தலைவர் பால்ராஜ், முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா, உள்ளிட்ட பாஜ நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.