உதவி ஆய்வாளர் கொலை வழக்கு: குற்றவாளியை போலிசார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு
உதவி ஆய்வாளர் பாலு கொலை வழக்கு குற்றவாளி முருகவேல் போலிசார் இன்று கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு : விசாரணை அதிகாரியாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நியமனம் எஸ்பி ஜெயக்குமார் பேட்டி.;
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பாலு (55). இவர் ஏரல் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல் (40). மெக்கானிக்கான இவர் பிப்ரவரி 1ம் தேதி ஏரல் பகுதியில் உள்ள ஓட்டல்களில் குடிபோதையில் தகராறு செய்தார். இதுகுறித்து அந்த ஓட்டல்களின் உரிமையாளர்கள் ஏரல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் அங்கு சென்று முருகவேலை கண்டித்து அனுப்பி வைத்தனர். இதனால் அவருக்கு போலீசார் மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது.
ஏரல் அருகே உள்ள கொற்கை விலக்கு பகுதியில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பாலு, ஏட்டு பொன் சுப்பையா ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது, பின்னால் லோடு ஆட்டோவை வேகமாக ஓட்டி வந்த முருகவேல், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதினார். இதில் கீழே விழுந்த சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பாலு, ஏட்டு பொன் சுப்பையா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த ஏரல் போலீசார் அங்கு விரைந்து வந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பாலுவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்த படுகொலை குறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்த குற்றவாளி முருகவேல் விளாத்திகுளத்தில் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை போலீசார் வைது செய்து பேரூரணி சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முருகவேலை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், உதவி ஆய்வாளர் பாலு கொலை வழக்கில் குற்றவாளி முருகவேல் விளாத்திகுளத்தில் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை இன்று கஸ்டடியில் எடுத்து விசாரிக்கவுள்ளதாகவும், மேலும் இவ்வழக்கை துரிதமாகவும் விரைவாகவும் விசாரிக்க வேண்டி ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேஷ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முருகவேலை காவலில் எடுத்து விசாரித்த பின்னரே குடிபோதையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து தெரியவரும்.