கனமழை வெள்ளத்தினால் சேதம் அடைந்துள்ள பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி நூற்றுக் கணக்கான விவசாயிகள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் ஏக்கர் கணக்கில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் பயறு வகை பயிர்கள், மக்காச்சோளம் உள்ளிட்ட அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான உளுந்து, பாசி பயிர்கள் தற்போது செடியிலேயே முளைத்து சேதம் அடைந்துள்ளன.
இந்நிலையில் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரியும், கடந்த 2019, 2020 ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தியும் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் நூற்றுக் கணக்கானோர் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். சேதம் அடந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகள் ஆட்சியர் அலுலகத்திற்குள் ஒட்டுமொத்தமாக நுழைய முயன்றனர். இதையடுத்து விவசாயிகளுடன் கூடுதல் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் 50 விவசாயிகள் மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் 50பேர் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை சந்தித்து மனு அளித்தனர். ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.