கனமழையால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒருவா காலமாகத் தொடர்ந்து மழை பெய்ததால் அணைகள் நிரம்பி வழிகின்றன. பாபநாசம், மணிமுத்தாறு, கடனா, ராமநதி அணைகளில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் 6 நாட்களாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளப்பெருக்கால் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் - முக்காணி இடையே உள்ள பழைய பாலம் நீரில் மூழ்கியுள்ளது. ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் பாய்வதால், முக்காணியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கிராமத்தை, 3 நாட்களாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. முழங்கால் அளவுக்கு வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்திருப்பதால், இயல்பு வாழ்க்கை முழுமையாக முடங்கியுள்ளது. தூத்துக்குடியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளைச் சுற்றித் தண்ணீர் தேங்கியுள்ளது. மழைநீரை வடியவைக்க கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள மீட்புப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட ஆட்சியர் செந்தில் ராஜ், பாதிக்கப்பட்ட மக்கள், 20க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.