தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் அதிகளவு சரக்கு பெட்டகங்களை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பாக துறைமுக பொறுப்புக் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திலுள்ள சரக்குபெட்டக முனையம் இயக்குபவர்களான பி.எஸ்.ஏ. சிக்கால் சரக்குபெட்டக முனையமானது 10.01.2021 அன்று ஒரே சரக்குபெட்டக கப்பலில் இருந்து 4,413 டி.இ.யு சரக்கு பெட்டகங்களை கையாண்டு, அதற்கு முந்தைய சாதனையான 10.02.2018 அன்று கையாண்ட அளவான 3,979 டி.இ.யு சரக்கு பெட்டகங்களை விட அதிகமாக கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.
எம். வி. எஸ். எஸ். எல். பிரம்மபுத்ரா என்ற இக்கப்பல் 260.05 மீட்டர் நீளத்துடன் பி.எஸ்.ஏ. சிக்கால் சரக்குபெட்டக முனையத்திற்கு கடந்த 8 ம் தேதி வந்தடைந்தது. இச்சரக்கு பெட்டக கப்பலிலிருந்து 4,413 டி.இ.யு சரக்கு பெட்டகங்களை பளுதூக்கி இயந்திரங்கள் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 25 நகர்வுகளுடன் சரக்குபெட்டகங்கள் கையாளப்பட்டு ஜனவரி 10 ம் தேதி இக்கப்பல் திரும்பி சென்றது.கொரோனா தொற்றின் காரணமாக உலகளாவிய தொழில்துறை வர்த்தகத்தில் நம்பிக்கை ஏற்படும் வகையில் அக்டோபர் 2020 முதல் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் கையாளப்படும் சரக்குகளின் அளவு மெதுவாக சற்று அதிகரிக்ககூடிய அறிகுறிகள் தென்படுவதாக வ.உ.சி துறைமுக பொறுப்பு கழக தலைவர் ராமச்சந்திரன் கூறினார்.