முகநூலில் பழக்கம்: இளம் பெண்ணுடன் தொடர்ந்த உறவால் பல லட்சம் இழப்பு -கைதான தொழிலதிபர்
முகநூல் பழக்கத்தால் பெண்ணிடம் பல லட்சங்களை இழந்த, தொழில் அதிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.;
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா கண்டியூரை சேர்ந்தவர் சரவண பார்த்திபன் (51). ரியல் எஸ்டேட்தொழில் செய்து வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன்(25), வெல்டர், இவரது மனைவி ஜனனி(25). இவருக்கும், சரவண பார்த்திபனுக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பழகி வருகின்றனர். அப்போது ஜனனி தனக்கு திருமணம் நடக்கவில்லை என்று கூறிதான் பழகியும் வந்துள்ளார்.
இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்துக் கொள்வதும் உண்டாம். இதில் குடும்பக்கடன் என்று கூறி ஜனனி சரவண பார்த்திபனிடம் 7 லட்ச ரூபாய்க்கு மேல் பெற்றுள்ளாராம். சரவண பார்த்திபனிடம் அதிகளவு பணம் புழக்கத்தை தெரிந்து கொண்ட ஜனனி அவரிடமிருந்து பணத்தை பறிக்க திட்டமிட்டார்.
சரவண பார்த்திபனிடம் போனில் பேசிய ஜனனி, பக்கத்து வீட்டு இளம்பெண் தன்னுடன் இருப்பதாகவும், அவரிடம் பேசும்படியும் கூறியுள்ளார். மேலும் ஒரு ஆள் கிடைத்தது என்று சந்தோஷத்தில் தொடர்ந்து பேசியுள்ளார். ஆனால், ஜனனியே குரலை மாற்றி பேசி வந்துள்ளார் என்பது அவருக்கு தெரியாது.
பக்கத்து வீட்டு பெண் சொன்ன வங்கி கணக்கிற்கும் அதிக அளவு பணத்தை சரவணன் பார்த்திபன் செலுத்தி வந்துள்ளார். இதேபோல் ஜனனியே தான் பேசுவது போலவும், பக்கத்து வீட்டு இளம் பெண் பேசுவது போலவும் தொடர்ந்து பேசி பணம் பறித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஜனனி ஒரு நாள் சரவண பார்த்திபனிடம் போனில் பேசி, உனது தொந்தரவு தாங்காமல் பக்கத்து வீட்டு இளம் பெண் தற் கொலைக்கு முயன்றுள்ளார். அவரை நான் காப்பாற்றி உள்ளேன்.
அவரை போலீசில் புகார் கொடுக்க வேண்டாம் என தடுத்து நிறுத்தி உள்ளேன். எனவே, அவருக்கு ஒரு தொகையை கொடுத்து சரிகட்டி விடலாம் என கூறியுள்ளார். இதற்கு சம்மதித்த சரவண பார்த்திபன் அதற்கான பணத்தை ஏற்பாடு செய்துள்ளார். அந்த பணத்தை வாங்க ஜனனி தனது கணவர் பார்த்திபனை போலீஸ் இன்ஸ்பெக்டர் போல் கும்பகோணத்துக்கு அனுப்பி வைத்தார்.
கும்பகோணம் வந்த பார்த்திபன் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த சரவண பார்த்திபனை சந்தித்து பணத்தை கேட் டுள்ளார்.
பார்த்திபனின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து சரவண பார்த்திபன், தனது ஆதரவாளர்களான வழக்கறிஞர்கள் வீரா, மனோகர் மற்றும் குடவாசலை சேர்ந்த குருசாமி, தஞ்சாவூரை சேர்ந்த நடராஜன் ஆகியோர் மூலம் இன்ஸ்பெக்டராக நடித்த பார்த்திபனை உரிய முறை யில் விசாரித்தபோது அவர் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார்.
அப்போது உண்மை தெரிந்து கொண்டு அதிர்ச்சி அடைந்த சரவண பார்த்திபன், ஜனனியின் கணவர் பார்த்திபனை லாட்ஜ் அறையில் அடைத்து வைத்தார்.
பின்னர் ஜனனியை போனில் தொடர்பு கொண்டு உனது கணவரை எங்களது கஸ்டடியில் வைத்துள்ளோம். இதுவரை என்னிடம் பறித்த பணத்தை கொடுத்தால் விடுவோம் என மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைத்த ஜனனி இதுபற்றி தூத்துக்குடி போலீசில் கணவரை மீட்டுத் தருமாறு புகார் அளித்தார். போலீசார் அவரை கும்பகோணம் போலீசில் புகார் அளிக்கும்படி கூறியதால் அவர் நேற்று கும்பகோணம் வந்து மேற்கு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் லாட்ஜிக்கு சென்று பார்த்திபனை மீட்டதுடன், சரவண பார்த்திபன் உள்ளிட்டோரை பிடித்து விசாரித்தபோது மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்தது.
இதுபற்றி ஜனனி அளித்த புகாரின் பேரில் சரவண பார்த்திபன், குடவாசல் குருசாமி - தஞ்சை நடராஜன் ஆகியோர் மீதும், அதேபோல் சரவண பார்த்திபன் அளித்த புகாரின் பேரில் ஜனனி, அவரது கணவர் பார்த்திபன்(25) ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். மேலும் இவர்கள் வேறு யாரிடமாவது முகநூலில் பழகி பண மோசடியில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும் கும்பகோணம் மேற்கு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முக நூலில் உஷாரா இருங்க நண்பர்களே..