தேனி : பேரூராட்சி பகுதிகளில் குடிதண்ணீர் திருட்டு- பொதுமக்கள் அவதி

மேலசொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் குடி தண்ணீர் திருடப்படுவதால், பொதுமக்கள் பெரும் சிரமமடைந்துள்ளனர்.

Update: 2021-06-12 02:34 GMT

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே உள்ள மேலசொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் குடிதண்ணீர் திருடப்படுவதால், தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

போடிமெட்டு மலை கிராமம், தர்மத்துப்பட்டி, ரெங்கநாதபுரம், கீழச்சொக்கநாதபுரம் உள்ளிட்ட கிராமங்கள் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளாக உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக தற்போது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்குத்தெருவில் சிலர் குடிநீர் வினியோகம் செய்யும் கேட்வால்வை தாங்களாகவே திறந்து கொண்டு கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியில் மட்டும் 24 மணி நேரமும் குடிநீர் தடையின்றி கிடைத்து வருகிறது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் போதிய அளவு குடிதண்ணீர் இல்லாததால் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆகவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சட்டவிரோதமாக குடிநீர் திருடும் சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பொது மக்களின் பயன்பாட்டுக்காக நாள்தோறும் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News