தேனி : மஞ்சளாறு அணை நீர்மட்டம் உயர்வு இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Update: 2021-06-04 16:39 GMT

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகே உள்ளது மஞ்சளாறு அணை. இந்த அணையின் முழு கொள்ளளவு 57 அடி ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையில் மலையில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்தானது வினாடிக்கு 192 கன அடி வீதம் நீர் வந்து கொண்டுள்ளது. மஞ்சளாறு அணையில் முழு கொள்ளளவான 57 அடியில், நீர்மட்டம் 51 அடியை எட்டிய போது முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், நீர் மட்டம் 53 அடியை எட்டிய போது இரண்டாவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது 55 அடி நீர்மட்டமாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அணையின் மொத்த கொள்ளளவான 487.35 மில்லியன் கன அடியில், தற்போது 435.32 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வரக்கூடிய 192 கன அடி நீரானது, அப்படியே முழுவதுமாக வெளியேற்றப்படுகிறது.

இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைக்கு பின்னர் மஞ்சளாறு அணையில் இருந்து வரும் தண்ணீரானது தேனி மாவட்டம், தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மற்றும் சிவஞானபுரம் கிராமங்கள் வழியாக கடந்து செல்லும் .மஞ்சளாறு அணையின் தண்ணீர் செல்லும் வழித்தடங்களில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை பராமரிக்கும் உள்ளிட்ட எந்த ஒரு பணிகளையும் மேற்கொள்ள கூடாது என்றும், பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.  


Tags:    

Similar News