தேனி : கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிக்க மரங்கள் வேறோடு அகற்றம்

போடிநாயக்கனூர் அருகே கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பதிப்பதற்காக மரங்கள் வேறோடு அகற்றப்படுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2021-06-13 14:10 GMT

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பதிப்பதற்காக மரங்கள் வேறோடு அகற்றப்படுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

போடியிலிருந்து சிலமலை கிராமத்திற்கு செல்லும் புறவழிச் சாலையாக ராணிமங்கம்மாள் சாலை உள்ளது. பெரும்பாலான வாகனங்கள் தமிழக நெடுஞ்சாலையை தவிர்த்து இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன. இந்த சாலையின் மேற்கு பக்கத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து மணல் காற்று வீசுவதால் இப்பகுதி முழுவதுமே சிறிய பாலைவனம் போல் காட்சியளிக்கும். மணல் காற்றை தடுப்பதற்காக இப்பகுதியில் அதிகமாக மரங்கள் நடப்பட்டு வளர்த்து வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மழை காலங்களில் மட்டும் மானாவரி பயிர்கள் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். ராணிமங்கம்மாள் சாலை 100 அடி அகல சாலையாகும். போடி நகராட்சிக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் சின்னமனூர் அருகே உள்ள எல்லப்பட்டி கிராமத்திலிருந்து முல்லை பெரியாற்று தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதற்காக குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இந்த குழாய்கள் ராணிமங்கம்மாள் சாலை வழியாக கொண்டு வரப்படுகிறது. இந்த பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நடைபெற்று வருகிறது.

குழாய்கள் கொண்டு வரப்படும் பகுதியில் மரங்கள் அதிகம் உள்ளது. இதனையடுத்து இந்த மரங்களை குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கனரக வாகனங்களைக் கொண்டு வேறோடு பிடுக்கி அப்புறப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்து தி கிரீன் லைப் பவுண்டேசன் அமைப்பை சேர்ந்தவர்களும், கிராம மக்களும் அங்கு சென்று மரங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த சிலமலை ஊராட்சி மன்ற தலைவர் ராமர், சில்லமரத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ஆகியோர் அங்கு வந்து பார்வையிட்டனர். அப்போது மரங்களை அகற்றாமலேயே குழாய்கள் பதிக்க இடவசதி இருந்தும் மரங்களை அகற்றுவதை உடனே நிறுத்த வலியுறுத்தினர். இதுகுறித்து போடி வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்று வந்த பணிகள் நிறுத்தப்பட்டது.

Tags:    

Similar News