Pongal Gift-பொங்கல் பரிசு வழங்குவதில் இதுவரை இல்லாத புது நடைமுறை..!
பொங்கல் பரிசுத்தொகை வழங்குவதில் தமிழக அரசு இதுவரை இல்லாத புதிய நடைமுறையினை பின்பற்றி வருகிறது.;
தமிழகத்தில் வரும் தை ஒன்றாம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் யாருக்கெல்லாம் 1000 ரூபாய் ரொக்கம் கிடைக்கும், யாருக்கெல்லாம் 1000 ரூபாய் கிடைக்காது என்பதை பார்ப்போம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும். இந்த நன்னாள் அனைத்துத் தொழில்களுக்கும், ஏன், மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2-ம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தினால், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி, சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும்.
மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது, வரும் 10-ம் தேதியன்றே, மகளிர் உரிமைத் தொகை பெற்று வரும் 1 கோடியே 15 இலட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும்" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.
யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பார்த்தால் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு ரூ.1000 கிடைக்கும். அதாவது PHH எனப்படும் முன்னுரிமை கார்டுகளுக்கும். PHH - AAY எனப்படும் அந்தோதயா அன்ன யோஜா கார்டுகளுக்கும், அதாவது 35 கிலோ அரிசி வாங்குவோருக்கும் கண்டிப்பாக கிடைக்கும். அதேபோல் NPHH - எனப்படும் முன்னுரிமையற்ற கார்டுகளுக்கும் வழங்கப்படும்.
யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு கிடைக்காது: NPHH-S என்று குறிப்பிட்டிருக்கும் ரேஷன் கார்டுக்கு சர்க்கரை மட்டுமே வழங்கப்படும் என்பதால் இந்த கார்டுகளுக்கு 1000 ரூபாய் பொங்கல் பரிசு கண்டிப்பாக கிடைக்காது, NPHH-NC ரேஷன் அட்டைதார்கள் எந்த பொருளும் வாங்காதவர்கள் என்பதால் அவர்களுக்கும் 1000 பொங்கல் பரிசு கிடைக்காது.
அதேநேரம் NPHH கார்டோ அல்லது PHH கார்டோ, PHH - AAY கார்டிலோ குடும்ப உறுப்பினர்கள் யாராவது அரசு ஊழியராக இருந்தால் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாராவது வருமான வரி கட்டியிருந்தாலோ அந்த குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசான 1000 ரூபாய் கிடைக்காது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வருமான வரி கட்டியவர்கள், அரசு ஊழியர்கள் என்றால், உங்கள் ரேஷன் கார்டு காட்டிக் கொடுத்து விடும். எனவே உங்களுக்கு 1000 ரூபாய் கிடைக்காது.
முதல் முறை: மகளிர் உரிமை தொகை வழங்கும் பாணியில் தான் 1000 ரூபாய் பொங்கல் பரிசினை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேநேரம் பொங்கல் பரிசு வருமான வரி கட்டுவோர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தரப்படாது என்று தனியாக அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலத்தில் அறிவிக்கப்பட்ட பொங்கலுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும் இந்த நடைமுறையில் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்குமே பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் வருமான வரி கட்டுவோர், அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு இல்லை என்று அறிவித்திருப்பது இதுவே முதல்முறையாகும். நிதி நெருக்கடி காரணமாக அரசு இவர்களுக்கு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.