ஹேர்ஸ்டைலில் தேனி பார்முலா : தமிழகம் பின்பற்ற பெற்றோர்,ஆசிரியர் கோரிக்கை
இனிமேல் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஒரே ஹேர் ஸ்டைல் தான். இதர ஸ்டைல் கிடையாது என திட்டவட்டமாக முடிவு செய்தனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அரசு பள்ளி மாணவர்கள் சிலர் ஆசிரியர்களுடன் தகராறினை தொடங்கி வைத்தனர். சில தவறான பழக்கங்களுக்கும் அடிமையாகி இருந்தனர். மாணவர்களின் இந்த செயல்களை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் தற்போது பரவி வரும் மாணவர்கள்-ஆசிரியர்கள் மோதல் தொடங்கிய இடமே பெரியகுளம் தான்.
பெரியகுளம் டி.எஸ்.பி., முத்துக்குமார் தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் ஆலோசனைப்படி இதனை கையாள ஒரு ஆயுதத்தை கையில் எடுத்தார். அனைத்து பார்பர்களையும் அழைத்து இனிமேல் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு போலீஸ் கட்டிங், மிலிட்டரி கட்டிங் போன்ற ஒழுங்கு நிறைந்த ஹேர்ஸ்டைலில் மட்டுமே முடி வெட்டி சிலை அலங்காரம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வெட்டாதீர்கள் என ஒரு உத்தரவு போட்டார்.
இதனை மாவட்டத்தில் அத்தனை டி.எஸ்.பி.,க்களும் பாலோ செய்தனர். பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களுக்கு ஒழுங்காக முடி வெட்டி விடுங்கள் என பார்பர்களுக்கு கடிதமே எழுதினர். இதனால் பார்பர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரு தெளிவான முடிவுக்கு வந்தனர். இனிமேல் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஒரே ஹேர் ஸ்டைல் தான். இதர ஸ்டைல் கிடையாது என திட்டவட்டமாக முடிவு செய்தனர்.
சில மாணவர்கள் முரண்டு பிடித்தாலும், அவர்களுக்கு முடிவெட்ட மறுத்து விட்டனர். இதன் விளைவு தற்போது பள்ளி மாணவர்களிடையே ஒரு ஒழுங்கான ஹேர் ஸ்டைலுடன் கூடிய முக அமைப்பு உருவாகி உள்ளது. பல பார்பர்கள் இந்த விஷயத்தில் போலீசாருக்கு உடந்தையாக மாறி விட்டனர். தங்களது மொபைல் போன்களி்ல போலீசாரின் உத்தரவுகள், ஆசிரியர்களின் கடிதங்களை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர். மாணவர்கள் வந்த உடன் அவர்களிடம் தங்கள் வாட்சாப்பில் உள்ள பதிவுகளை காட்டுகின்றனர். 'தம்பி நீ தர்ற நுாறு ரூபாய்க்கு நான் ஜெயிலுக்கு போகனுமா', 'போலீஸ் சொல்றததான் கேட்போம். இஷ்டம் இருந்தா வெட்டு, இல்லைனா போய்க்கிட்டே இரு' என பிடிவாதமாக கூறி விடுகின்றனர்.
இதனால் தேனி மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலான மாணவர்களிடம் ஒரு ஓழுங்கான முக அமைப்பும், ஹேர்ஸ்டைலும் உருவாகி வருகிறது. இதே பார்முலாவை தமிழகம் முழுவதும் பயன்படுத்த போலீஸ் நிர்வாகமும், பள்ளிக்கல்வித்துறையும் முன்வர வேண்டும் என பெற்றோர்களும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த பெருமை எல்லாம் பெரியகுளம் டி.எஸ்.பி., முத்துக்குமாருக்கும் அறிவுரை வழங்கிய தேனி எஸ்.பி., டோங்கரே பிரவீன்உமேஷையே சேரும் என போலீஸ் அதிகாரிகளும் கூறி வருகின்றனர்.