வெளி மாவட்டங்களுக்கு காய்கறி கொண்டு செல்ல அனுமதி: தோட்டக்கலைத் துறை தகவல்
தேனி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தோட்டக்கலை சார்ந்த உற்பத்தி பொருட்களை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு தேனி மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி உத்தரவின் பேரில் அனுமதி சீட்டு வழங்கப்படுவதாக தோட்டக்கலைத் துறையினர் தகவல் தெரிவித்தனர்.
தேனி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு வரும் காய்கறிகள், பழங்கள், மலர்கள், நறுமண மற்றும் வாசனைத் திரவியப் பயிர்கள் உள்ளிட்ட பொருட்களை உரிய காலத்தில் தேனி மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான அனுமதி சீட்டினை அருகிலுள்ள வட்டார தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டு உடனடியாக பெற்று கொள்ளலாம்.
தற்போது பரவிவரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக தளர்வில்லா ஊரடங்கு அமலில் உள்ளதால் தோட்டக்கலை துறை சார்ந்த விளைபொருட்களான மாங்காய், வாழை, திராட்சை, கொய்யா போன்ற பழ வகைகளையும் தக்காளி, கத்தரி, வெண்டை போன்ற காய்கறிகள் மல்லிகை, ரோஜா மலர்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய விரும்பினால் அந்த விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு தேனி மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில் ஒவ்வொரு வட்டார தோட்டக்கலை அலுவலர்கள் அனுமதி உரிமைச் சீட்டு வழங்கி வருகின்றனர். அனுமதி சீட்டு பெற விரும்பும் விவசாயிகள் உரிய விபரங்களோடு தங்களது வட்டார உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம்.
தேனி 6383662003, கம்பம் 7200632203, பெரியகுளம் 8940689196, உத்தமபாளையம் 9003704076, ஆண்டிபட்டி 9842931392, போடிநாயக்கனூர் 9840981353, சின்னமனூர் 9994742237, கடமலை மயிலை 7904724911 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவசாயிகள் பயன்பெறுமாறு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் பாண்டி கேட்டுக் கொண்டுள்ளார்.