வளர்ச்சிப்பணிகளில் குறை: புகார் எண் அறிவிப்பால் மக்கள் அதிருப்தி
தேனி மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகளில் குறைபாடு இருந்தால் புகார் தெரிவிக்க குறிப்பிட்டுள்ள எண் குறித்து பொதுமக்கள் அதிருப்தி;
வளர்ச்சிப்பணிகளில் தரக்குறைவு இருந்தால் ஜியோ நெட் ஒர்க் கஸ்டமர் கேருக்கு புகார் செய்யுங்கள் என ஜெயமங்கலம் ஊராட்சியில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் ஜெயமங்கலம் ஊராட்சியில் வ.உ.சி.,தெரு தெற்கு பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டுதல், சிறுபாலம் அமைத்தல் ஆகிய பணிகள் நடந்தன. பணிகள் நடந்த இடத்தில் என்னென்ன பணிகள், எந்த அரசுத்துறையால் செய்யப்பட்டன. எவ்வளவு செலவிடப்பட்டது. பணிகளில் குறைகள் இருந்தால் குறிப்பிட்ட நம்பரில் புகார் செய்யுங்கள் என நம்பரும் எழுதிப்போடப்பட்டிருந்தது.
இங்கு தான் உச்சகட்ட காமெடி அரங்கேறி உள்ளது. அங்கு புகார் செய்யலாம் என்ற இடத்தில் 1299 என்ற நம்பரை எழுதிப்போட்டுள்ளனர். இந்த நம்பர் ஜியோ நெட் ஒர்க் கஸ்டமர் கேர் நம்பர் ஆகும். பொதுமக்களை இப்படி கேலிக்கூத்தாக சித்தரித்த கான்ட்ராக்டர் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.