அரசு நிலங்கள் தனியாருக்கு பட்டா வழங்கிய அதிகாரிகள்: விசாரணைக்குழு அமைப்பு

தேனி மாவட்டத்தில் அரசு நிலத்தை தனியாருக்கு வழங்கிய அதிகாரிகளை விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-07 09:00 GMT

பைல் படம்.

தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியத்தை சேர்ந்த அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் என்பவருக்கு அரசு நிலம் 100 ஏக்கரை வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா வழங்கி உள்ளனர். இது தொடர்பாக சர்வேயர் சக்திவேல், தாசில்தார்கள் கிருஷ்ணக்குமார், ரத்தினமாலா, துணை தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சய் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தொடர் விசாரணையில் மற்றொரு சர்வேயர் பிச்சைமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் பெரியகுளம் தாலுகாவில் ஜெயமங்கலம், மேல்மங்கலம் கிராமங்களில் 56 ஏக்கர் அரசு நிலத்தை கேரள மாநிலத்தை சேர்ந்த சங்கரன்குட்டி மகன் சுதாகரன், சுதாகரன் மனைவி கோமளவள்ளி, அவரது மகன் கிரிஷ்கிருஷ்ணா, மற்றும் நரேஷ்குரூஷ் ஆகியோருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. வனப்பகுதிகளை ஒட்டியிருக்கும் அரசு நிலங்கள் மட்டுமின்றி, கிராமங்களில் உள்ள அரசு நிலங்களும் தனியார் பெயருக்கு பட்டா வழங்கப்பட்டு தாரை வார்க்கப்பட்டுள்ளன. சில இடங்களில் தெருக்கள் கூட தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோர்ட்டில் சில வழக்குகளும் நடந்து வருகின்றன. இந்த முறைகேடுகளுக்கு காரணமாக இருந்த தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளின் பட்டியலை தயாரித்து வருகிறது.

இது போல் மாவட்டத்தில் வேறு பல இடங்களில் அரசு நிலம் பலருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து முழு விசாரணை நடத்த அறிக்கை வழங்க பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தரும் அறிக்கை அடிப்படையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் இதேபோன்ற முறைகேடுகள் அ.தி.மு.க, ஆட்சியில் மாநிலம் முழுவதும் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் இப்படிப்பட்ட முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழக அரசு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுரை வழங்கி உள்ளது.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் இப்பிரச்னை தொடர்பாக தேனி கலெக்டர் முரளீதரனுடன் ஆலோசனை செய்து வருகின்றனர். விரைவில் இப்பிரச்னை பூதாகரமாக உருவெடுக்கும் என அரசியல் பிரமுகர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News