இரும்பு பட்டறை தொழிலாளர்களுக்கு பராமரிப்பு பதிவேடுகள் வழங்கல்
ஒவ்வொரு இரும்பு பட்டறையும் தங்களுக்கென தனி முத்திரை உருவாக்கி, தாங்கள் தயாரிக்கும் ஆயுதங்களில் பதிக்க வேண்டும்
தேனி மாவட்டம் முழுவதும் இரும்பு பட்டறை தொழிலாளர்களுக்கு பராமரிப்பு பதிவேடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பட்டறை வைத்துள்ளவர்கள் இனி தாங்கள் செய்யும் ஆயுதங்களில் முத்திரைகளை பதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் ரவுடிகள், சமூக விரோதிகள் கத்தி, அரிவாள், வாள், பட்டாக்கத்தி, கோடாறி, உட்பட பல்வேறு ஆயுதங்களை தவறான செயல்களுக்கு பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் ஆலோசனை கூட்டம், அந்தந்த சப்-டிவிசன்களுக்கு உட்பட்ட டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டங்களில் பங்கேற்கும் இரும்பு பட்டறை தொழிலாளர்களிடம், ஒவ்வொரு இரும்பு பட்டறையும் தங்களுக்கென தனி முத்திரை உருவாக்கி, தாங்கள் தயாரிக்கும் ஆயுதங்களில் பதிக்க வேண்டும். விவசாய பயன்பாட்டிற்கு தவிர வேறு யாருக்கும் ஆயுதங்களை விற்க கூடாது. தங்களது பட்டறையில் ஆயுதங்கள் வாங்குபவர்களின் பெயர், முகவரி, ஆதார் நம்பர், அலைபேசி நம்பர் உட்பட முழு விவரங்களையும் பதிவேட்டில் பதிவு செய்து, அவர்களது போட்டோ ஒட்டி கையொப்பம் பெற வேண்டும். அவர்கள் ஆயுதம் வாங்கிய தேதி, விலை, ஆயுதத்தின் முழு விவரத்தையும் பதிவு செய்ய வேண்டும். யார் யாருக்கு எப்பொழுது எத்தனை ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டது என்ற விவரத்தை அந்தந்த டி.எஸ்.பி.,க்களிடம் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதற்காக இரும்பு பட்டறை வைத்திருக்கும் அனைவருக்கும் எஸ்.பி., அலுவலகம் சார்பில் பராமரிப்பு பதிவேடுகள் வழங்கப்பட்டன.