சோத்துப்பாறை முதல் மாதா கரடு வரை கால்வாய் அமைத்து நீர் வழங்க வலியுறுத்தல்
கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு வந்து விநியோகம் செய்தால் 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிக பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் பயன்பெறும்
பெரியகுளத்தில் சோத்துப்பாறை அணை முதல் மாதாகரடு வரை புதிய கால்வாய் அமைத்து நீர் வழங்க வேண்டும். இதன் மூலம் 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிக பரப்பளவு கொண்டு நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பெரியகுளத்தில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குனர் சென்றாயன், வேளாண்மை உதவி அலுவலர்கள் கோபிநாத், செந்தில்குமார், துணை வேளாண்மை அலுவலர் குணசேகரன், வேளாண்மை அறிவியல் மைய தொழில்நுட்ப பிரிவு அலுவலர் ஹரிஸ்மாதேவி பங்கேற்றனர்.
டி.கள்ளுப்பட்டி விவசாய சங்க தலைவர் ஆண்டியப்பன், செயலாளர் காமராஜ், உதவி செயலாளர் நாகராஜ், துணைத்தலைவர் பழனிவேல் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். இயற்கை விவசாயம், நுண்ணீர்பாசனம் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. அப்போது விவசாயிகள், சோத்துப்பாறை முதல் மாதாகரடு வரை தனி கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு வந்து விநியோகம் செய்தால் 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிக பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் பயன்பெறும். இத்திட்டத்தை உடனே செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.