தீபாவளி நேரத்தில் அதிகரிக்கும் செயின் பறிப்பு: தீவிர கண்காணிப்பில் போலீஸார்
தேனி மாவட்டத்தில் வீடு புகுந்து திருடுவது, செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது;
தீபாவளி பண்டிகை கொண்டாட இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் பரவலாக செயின் பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. இந்த சம்பவங்களில் ஈடுபடும் கும்பலை முழுமையாக கண்காணித்து வருவதாகவும், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
குறிப்பாக சேலம் பகுதியில் தொழில் செய்யும் சிலர், தேனி மாவட்டத்திற்கு வந்து திருட்டு, செயின் பறிப்பில் ஈடுபட்டு விட்டு உடனே சேலம் திரும்பி தங்கள் தொழிலை தொடர்கின்றனர். ஒரு இரவுக்குள் இதையெல்லாம் முடித்து விடுகின்றனர். அதேபோல், தேனி கும்பல் கோவை பகுதியிலும், கோவை கும்பல் விழுப்புரம் பகுதியிலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு, மீண்டும் தங்கள் சொந்த ஊர் திரும்பி வழக்கமான பணிகளை மேற்கொள்கின்றனர்.
இவர்கள் சமூகத்தில் மிகவும் மதிப்புமிக்க மக்களை போல் நாகரீகமாக நடந்து கொள்கின்றனர். எந்த திருட்டு கும்பலும் தான் வசிக்கும் இடத்தில் திருடுவதில்லை. திருடப்போகும் இடத்தில் வசிக்கும் மக்களின் உதவிகளை மட்டுமே பெற்றுக் கொள்கின்றனர். இந்த விஷயம் தொடர்பாக நீண்ட ஆய்வுகள் மேற்கொண்டு ஒவ்வொரு பகுதியிலும், சிலரை சந்தேகப்பட்டியலில் சேர்த்து கண்காணித்து வருகிறோம். இருப்பினும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என தேனி மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.