முல்லைபெரியாறு அணையை உடைத்தால் இடுக்கி மாவட்டத்தைப் பிரிக்க போராடுவோம்

முல்லை பெரியாறு அணையை உடைத்தால் இடுக்கிமாவட்டத்திலுள்ள பீர்மேடு, உடும்பஞ்சோலை, தேவிகுளத்தை தமிழகத்துடன்இணைக்கபோராடுவோம்

Update: 2021-10-26 02:45 GMT

நீர் நிரம்பி காணப்படும் முல்லை பெரியாறு அணை.

முல்லை பெரியாறு அணையை கேரள அரசு உடைக்க நினைத்தால், இடுக்கி மாவட்டத்தை உடைத்து தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலை தாலுகாக்களை தமிழகத்துடன் இணைப்போம் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இது குறித்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது: இடுக்கி மாவட்டத்துடன் தற்போது இணைந்துள்ள பீர்மேடு, தேவிகுளம், உடும்பஞ்சோலை தாலுகாக்கள் 1956ம் ஆண்டு வரை தமிழகத்துடன் இணைந்திருந்தது. மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது இந்த தாலுகாக்கள் கேரளாவுடன் இணைக்கப்பட்டு, தமிழர்கள் மட்டுமே வாழ்ந்த இந்த தாலுகாக்களில் மலையாளிகள் குடியேற வைக்கப்பட்டனர். கேரளாவில் தற்போது முல்லை பெரியாறு அணையை பற்றி மிகவும் தவறான பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. கேரள முதல்வர் முல்லை பெரியாறு அணையை உடைத்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்கிறார்.

கேரள சமூக வலைதளங்கள் அனைத்திலும் தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதே நிலை நீடிப்பதால் இரு மாநில மக்களும் மோதிக்கொள்ளும் அபாயம் உருவாகி வருகிறது. இதனை தடுக்க மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மலைப்பகுதியை கூர்க்காலாந்து என்ற பெயரில் தன்னாட்சி பகுதியாக அறிவித்தது போல், கேரளாவில் பீர்மேடு, உடும்பஞ்சோலை, தேவிகுளம் தாலுகாக்களை தன்னாட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும். இல்லையெனில் மீண்டும் 1956க்கு முன்பு இருந்ததே போல் தமிழகத்துடன் இணைக்க வேண்டும். இந்த கோரிக்கையினை வலியுறுத்தி போராடுவோம் என்று  கூறியுள்ளனர்.

Tags:    

Similar News