கொரோனா தடுப்பூசியில் காக்டெயில்: பொதுமக்களை காப்பாற்றும் சுகாதாரத்துறை

கொரோனா தடுப்பூசியில் காக்டெயில் அபாயம் ஏற்பட்டு விடாமல் இருக்க தேனி மாவட்ட சுகாதாரத்துறை சிறப்பான ஏற்பாட்டை செய்துள்ளது.

Update: 2021-07-20 11:30 GMT

கொரோனா தடுப்பூசியில் காக்டெயில் அபாயம் ஏற்பட்டு பொதுமக்கள் உயிர்ப்பலி ஆகி விடாமல் இருக்க தேனி மாவட்ட பொதுசுகாதாரத்துறை புதிய ஏற்பாட்டை செய்துள்ளது.

தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட முன்வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பூசியில் கோவிஷீல்டு, கேவாக்சின், ஸ்புட்னிக் என பல ரகங்கள் வந்து விட்டன. இன்னும் பல ரகங்கள் வர உள்ளன. இந்நிலையில் முதல் டோஸ் தடுப்பூசிக்கும், இரண்டாம் டோஸ் தடுப்பூசிக்கும் இடைவெளி குறைந்தபட்சம் இரண்டு மாதம் ஆகி விடுகிறது.

இதற்குள் முதல் டோஸ் போட்ட தடுப்பூசியின் பெயரை பொதுமக்கள் மறந்து விடுகின்றனர். இரண்டாம் டோஸ் போடும் நபர்களுக்கும் முதல் டோஸ் என்ன போடப்பட்டுள்ளது என்பதை அவர்களின் ஆதார் நம்பரை பரிசோதித்து பார்த்து ஊசி போட காலதாமதம் ஆகி விடும். அதேநேரம் முதல் டோஸ் ஒரு வகையும், இரண்டாம் டோஸ் ஒரு வகையும் போட்டு தடுப்பூசியில் காக்டெயில் அபாயம் ஏற்பட்டு விட்டால் ஊசி போட்டவரின் உயிருக்கே அபாயமாக முடிந்து விடும்.

எனவே, தேனி மாவட்ட சுகாதாரத்துறை தடுப்பூசி போடும் நபர்களுக்கு ஒரு அடையாள அட்டை வழங்கி வருகிறது. அதில், முதல் டோஸ் தடுப்பூசி எங்கு போடப்பட்டது, எந்த வகை  தடுப்பூசி, எந்த தேதியில் போடப்பட்டது. தடுப்பூசி போட்டவரின் பெயர், அலைபேசி எண், ஆதார் எண் விவரங்கள், அடுத்த தடுப்பூசி எந்த தேதியில் போட வேண்டும் என்பது உட்பட அத்தனை விவரங்களையும் பதிந்து ஊசி போட்ட உடனே ஊசி போட்ட நபருக்கு கொடுத்து, இந்த அட்டையை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த ஊசி போடும் போது, இதனை காண்பித்து போட்டுக்கொள்ளுங்கள்  என அறிவுறுத்துகின்றனர்.

முதல் கட்டமாக இந்த நடைமுறை, கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமல்படுத்தப்பட்டது. விரைவில் மாவட்டம் முழுவதும் இந்த நடைமுறை கொண்டு வரப்படும் என பொதுசுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடைமுறை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

Tags:    

Similar News