தேனி மாவட்டம்-முழு ஊரடங்கு-தடையை மீறிய வாகனங்கள் காவல்துறையினரால் பறிமுதல்
தேனி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தடையை மீறி சுற்றித் திரிந்த வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.;
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதியிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தடையை மீறி சுற்றித்திரிந்த வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழக அரசின் உத்தரவுக்கிணங்க தேனி மாவட்டத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்நிலையில் தடையை மீறி சுற்றி திரிந்த வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
திங்கள் கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூர், தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட பகுதியில் சிலர் சாலைகளில் சென்று வந்தனர். இவர்களை போலீஸார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
தேனி - திண்டுக்கல் மாவட்ட எல்லையான காட்ரோடு சோதனைச் சாவடி, பெரியகுளம் சோதனைச்சாவடி, தேனி நேரு சிலை அருகே உள்ள சோதனைச் சாவடி, ஆண்டிபட்டி எம்ஜிஆர் திடல் அருகில் உள்ள சோதனைச் சாவடி, தேனி - மதுரை மாவட்ட எல்லையான கணவாய் சோதனைச்சாவடி, சின்னமனூர் மூன்றாந்தால் சோதனைச்சாவடி, உத்தமபாளையம் பைபாஸ் சோதனைச் சாவடி, தமிழக - கேரள எல்லையான கம்பம் மெட்டு சோதனைச் சாவடி, போடிமெட்டு சோதனைச் சாவடி, குமுளி சோதனைச் சாவடி சாவடி, போடி சாலைக் காளியம்மன் கோவில், போடி ரெங்கநாதபுரம் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த காவல்துறை கொரோனா தடுப்பு சோதனை சாவடிகளில் போலீஸார் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். இ-பதிவு பெறாத வாகனங்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.
தேவையின்றி சுற்றி திரிந்த வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். நகர் பகுதியில் முக்கிய சாலைகளில் போலீஸார் போக்குவரத்தை தடை செய்து தடுப்புகள் அமைத்துள்ளனர்.
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி வழிகாட்டுதலின்படி, உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களான போடி - பார்த்திபன், தேனி - முத்துராஜ், பெரியகுளம் - முத்துக்குமார், ஆண்டிபட்டி - தங்க கிருஷ்ணன், உத்தமபாளையம் - சின்னகண்ணு ஆகியோர் தலைமையிலான போலீஸார் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.