ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா- தெருவிற்கு சீல்

Update: 2021-04-13 10:15 GMT

தேனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 வயது குழந்தை உட்பட 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நகராட்சி நிர்வாகத்தினர் அப்பகுதிக்கு சீல் வைத்தனர்.

தேனி நகரில் பங்களாமேடு அருகே பாரஸ்ட் ரோடு முதல் பிரிவில் வசிக்கும் 37 வயதுடைய நபருக்கு கடந்த 11ஆம் தேதியன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகத்தினர், அந்த குடும்பத்தினருக்கு கொரோனா சோதனை செய்ததில் 66 வயது உடைய அப்பா, 65 வயதுடைய அம்மா 10 வயது குழந்தைக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து 60 வயதுக்கு மேற்பட்ட இருவரையும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் 37 மற்றும் 10 வயது உடைய இருவரும் வீட்டிலேயே தனிமை படுத்தி கொண்டனர். இதனையடுத்து நகராட்சி நிர்வாகத்தினர் அந்த தெருவில் உள்ள 18 குடும்பத்தினர் வெளியில் வராமல் இருக்க அறிவுறுத்தினர். பின்னர் வீடு, தெரு பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தனர். தொடர்ந்து அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

அந்த தெருவுக்குள் வெளியாட்கள் யாரும் சென்று வராமல் இருப்பதற்காக மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு, எச்சரிக்கை போர்டும் நகராட்சி நிர்வாகத்தால் வைக்கப்பட்டுள்ளது. அதோடு அருகில் உள்ள தெருக்களிலும் கிருமி நாசினி மற்றும் குளோரின் பவுடர் தெளிக்கப்பட்டு பொதுமக்கள் கொரோனா விதிமுறைகள் கடைப்பிடித்து முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News