100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேனியில் மாற்றுத்திறனாளிகள் வாகன பேரணி.

தேனியில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்

Update: 2021-03-25 17:45 GMT

     தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மேலும் வாக்காளர்கள் தங்களது வாக்குப்பதிவை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.

  இந்நிலையில் தேனி மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இன்று மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இரு சக்கர வாகன  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கிருஷ்ணனுண்ணி இந்த விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.  இதில் வாக்காளர் என்பதில் பெருமை கொள்வேன்! வாக்காளிக்க தயார் என்பேன்!, வாக்குரிமை நமது அடிப்படை உரிமை,

வாக்களிப்பது ஜனநாயக கடமை, வாக்களித்திடுவீர், ஜனநாயகத்தை காத்திடுவீர், வாக்கின் வலிமை தேசத்தின் வலிமை, 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியனின் முதல் பெருமை வாக்களித்தல்,

வேற்றுமை மறந்து ஒற்றுமையாக வாக்களிக்கும் நேரமிது, ஜனநாயகத்தின் வலிமை உங்கள் ஒவ்வொருவரின் ஓட்டிலும் உள்ளது, எனது வாக்கு எனது உரிமை, 100 சதவீத ஓட்டு இந்தியர்களின் பெருமை போன்ற பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, மாற்றுத்தினாளிகள் தங்களது வாகனங்களில் வாக்காளர் விழிப்புணர்வு தலைகவசம் அணிந்துவாறு பங்கேற்றனர்.

தேனி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இப்பேரணியானது மதுரை சாலை, அரண்மனைப்புதூர் விலக்கு, பங்களாமேடு, உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று காமராஜர் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் தேனி மாவட்ட தேர்தல் பொதுப் பார்வையாளர்களான  பிரபுட்டான் டேவிட் பிரதான், ரவீந்தர்,செலவின பார்வையாளரான கிலானி பாஷா, காவல் துறை பார்வையாளர் டாவா ஷெர்பா மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


   

Tags:    

Similar News