முழு ஊரடங்கு - கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.;
தேனி மாவட்டத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்தொகையின் முதல் தவணையாக ரூ.2000 வழங்கும் தொடக்க நிகழ்வு, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையிலும், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என்.இராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்தொகை ரூ.4,000 வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ.2,000 வழங்கும் திட்டத்தினை கடந்த 10.05.2021 அன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்பட உள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 526 நியாய விலைக்கடைகளின் மூலம் மொத்தம் 4,09,568 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2,000 முதல் தவணை தொகையினை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிகழ்வு கம்பம், ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வழங்கி, தொடங்கி வைக்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு உதவித்தொகையினை பெற வருகை தரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்திட நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் நிவாரண உதவித்தொகை வழங்கும் பணியை கண்காணித்திட கண்காணிப்பு அலுவலர்கள், நடமாடும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ், தேனி மண்டல இணைப் பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) ஜீவா, மாவட்ட வழங்கல் அலுவலர் கார்த்திகாயிணி மற்றும் துணை பதிவாளர்கள் உள்ளிட்ட துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.