தேனியில் குடியரசு தின விழா
தேனி மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தேனி மாவட்டத்தில் நடைபெற்ற 72வது இந்திய குடியரசு தின விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இவ்விழாவில், சிறப்பாக பணிபுரிந்த 76 காவலர்களுக்கு முதலமைச்சரின் தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
மேலும் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் குற்றச்சாட்டு மற்றும் விபத்தின்றி பணிபுரிந்த 3 ஓட்டுநர்களுக்கு தங்கப் பதக்கங்களும், தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் முன்மாதிரி செயல் திறனுக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் இளங்கோவன் உள்பட 3 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, பெரியகுளம் சார் ஆட்சியர் சினேகா உள்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் மாவட்ட வருவாய் அலுவலர் தேசிய கொடியை ஏற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.