தேனி சுற்றுவட்டார பகுதிகளில் செங்கரும்பு விளைச்சல் அமோகம் : விவசாயிகள் மகிழ்ச்சி

Update: 2020-12-21 06:44 GMT

தேனி மாவட்டம் சின்னமனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கரும்பு விளைச்சல் அமோகமாக இருப்பதாலும் இதனால் நல்ல விலையும் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு ஏறத்தாழ ஒரு மாதமே உள்ள நிலையில் சின்னமனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செங்கரும்பு அறுவடைக்கு தயாராக உள்ளது. ஒரு கட்டு கரும்பு ரூ.200 லிருந்து 250 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சின்னமனூர் மார்க்கையன்கோட்டை பிரிவு பகுதியிலிருந்து துவங்கி தேனி சாலை சீலையம்பட்டி வரையில் பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் விதை கரும்பினை நடவு செய்து இரண்டு வாரத்தில் நிறைவு செய்தனர்.

பயிரிடப்பட்ட கரும்பிற்கு முல்லைப் பெரியாற்றிலிருந்து பாசன நீராக கிடைத்ததாலும், சமீபத்தில் பெய்த மழையால் 6 அடியிலிருந்து 8 அடிவரை வரை செங்கரும்பு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. ஒரு ஏக்கருக்கு உரம், மருந்து, சாணம், களையெடுப்பு கூலி என 2 லட்ச ரூபாய் வரை செலவு செய்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். அதற்கேற்ற வகையில் கரும்பு நல்ல உற்பத்தியை கண்டுள்ளதால் 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையில் விலை போவதாகவும் கூறினர்.

போதுமான மழை கிடைத்துள்ளதால் சின்னமனூரில் சாகுபடி செய்யப்பட்டிருக்கும் செங்கரும்பு நல்ல அமோக விளைச்சலை கண்டுள்ளது. இது குறித்து சின்னமனூர் கரும்பு விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு மழையும் தொடர்ந்து கை கொடுத்திருப்பதால் கரும்பு மகத்தான விளைச்சல் கண்டுள்ளது. சின்னமனூர் கரும்பிற்கு நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது. விலையும் ஏற்றமாக உள்ளது என்று கூறினர்.

Tags:    

Similar News