ரசிகருக்கு எம்.ஜி.ஆர். கொடுத்த மரியாதை
தனது ரசிகருக்கு எம்.ஜி.ஆர்., கொடுத்த மரியாதை அத்தனை பேரையும் உலுக்கி எடுத்து விட்டது.
திருச்சி சவுந்தரராஜன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவரோடு பல படங்களில் நடித்தவர். அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றிவர். அவரை தனது அமைச்சரவையில் எம்.ஜி.ஆர். சேர்த்துக் கொண்டார். தனது ரசிகர் மன்றத்தில் இருந்தவர் தானே என்று நினைக்காமல், அமைச்சருக்கு உரிய மரியாதையை அவருக்கு அளித்தார்.
1978-ல் அமைச்சராக நியமிக்கப்பட்ட திருச்சி சவுந்தரராஜன் ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பின் பொறுப்பேற்க கோட்டைக்கு வந்தார். முதல்வர் எம்.ஜி.ஆரும் உடன் வந்து, புதிய அமைச்சரின் அறைக்கு அழைத்து சென்று மாலை அணிவித்து வாழ்த்தி அமைச்சருக்கான இருக்கையில் அமரச் செய்தார்.
அதோடு மட்டுமல்ல வழக்கமாக முதல்வர்கள் அமர்ந்திருக்க அவர் பின்னால் மற்றவர்கள் நிற்பதை பார்த்திருப்போம். ஆனால், அமைச்சர் நாற்காலியில் திருச்சி சவுந்தரராஜன் அமர்ந்திருக்க, அவர் அருகே தானும் மற்ற அமைச்சர்களோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர்.
முதலமைச்சருடன் அப்போதைய அமைச்சர்கள் கா.ராஜாமுகமது, நாஞ்சிலார், பண்ருட்டி ராமச்சந்திரன், சி.பொன்னையன், திருநாவுக்கரசு, அனகாபுத்தூர் ராமலிங்கம் ஆகியோர் நின்று படம் எடுத்துக் கொண்டனர். தனது ரசிகருக்கு எம்.ஜி.ஆர்., கொடுத்த மரியாதை அத்தனை பேரையும் உலுக்கி எடுத்து விட்டது. இப்படி ஒரு மாண்பு எம்.ஜி.ஆரிடம் மட்டுமே காண முடியும்.