சென்னையிலிருந்து இன்று விடைபெறும் வெளி மாவட்ட தொழிலாளர்கள்

சென்னையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த வெளி மாவட்ட தொழிலாளர்கள் இன்று விடைபெறுகின்றனர்.;

Update: 2023-12-12 10:59 GMT

சென்னையில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டு வெள்ளம் வடிந்த பகுதிகளில் உள்ள குப்பைகள், முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன.

சென்னையில் மாநகராட்சி சார்பில் கடந்த 5 நாட்களில் 35 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டன. குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்த வெளிமாவட்ட தொழிலாளர்கள் இன்றோடு விடைபெற்று செல்கின்றனர். மிக்ஜம் புயல் பாதிப்பிலிருந்து சென்னை மாநகரம் மீண்டு வந்துவிட்ட நிலையில், 9 நாட்களுக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. மாநகரின் சில பள்ளிகள் தவிர, பெரும்பாலான பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.

நுங்கம்பாக்கம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகள் மற்றும் கழிப்பறைகளை ஆய்வு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் மொத்தம் உள்ள 420 மாநகராட்சி பள்ளிகளில் 4 பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் கழிவறை தூய்மை உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் 6-ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலான 5 நாட்களில் 35 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. வெளி மாவட்டங்களில் இருந்து, சென்னையில் தூய்மைப்பணி மேற்கொள்ள வந்திருந்த சுமார் 2 ஆயிரத்து 300 தூய்மைப் பணியாளர்கள், தங்கள் பணிகளை நிறைவு செய்துள்ளனர். அவர்கள் அனைவரும்  இன்று சென்னையில் இருந்து விடைபெறுகின்றனர். சென்னையில் 700க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அங்கு தோல் நோய், சுவாச பிரச்சினைகள் மற்றும் எலி காய்ச்சல் உள்ளிட்ட அனைத்துக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னையில் மிக்ஜம் புயல் காரணமாக குப்பைகள் அதிகளவில் தேங்கி உள்ளது. கொட்டுவதற்கு இடம் இல்லாமல் அரசு அதிகாரிகள் திணறி வருகின்றனர். சுமார் 50 லாரிகள் வரிசையில் நிறுத்தப்பட்டுள்ளன. குப்பைகள் தேங்குவதன் காரணமாக நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தியது. நீண்டநாட்களாக தண்ணீர் வடியாததால் மக்கள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாினர். மேலும் வீடுகளில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.

வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகள் அனைத்தும் தேங்கி இருந்தன. சென்னையில் மழை நின்று மெல்ல இயல்பு நிலை திரும்பி வந்ததைத்தொடர்ந்து குப்பைகள் படிப்படியாக அகற்றப்பட்டு வந்தது. வழக்கமாக சென்னையில் நாளொன்றுக்கு 6 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்படுவது வழக்கம்.

தற்போது மிக்ஜம் புயலைத் தொடர்ந்து சுமார் 9 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. வெள்ளநீரால் சேதமான சோபா, நாற்காலிகள், டிவி, பெட்டுகள் போன்றவை குப்பையில் அதிகளவில் காணப்படுகிறது. இந்த குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு குப்பைகள் சேகரிப்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் நாள்தோறும் அதிகளவிலான குப்பைகள் அகற்றப்படுவதால் குப்பைகள் சேகரிக்கும் நிலையத்திலும் முழுமையாக இருப்பதால் சுமார் 50 லாரிகள் வரிசையில் நிற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் தரப்பில் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகின்றனர்.

தினந்தோறும் அதிகளவிலான குப்பைகள் கொட்டப்படுவதால் பல்வேறு சாலைகளில் குப்பைகள் அனைத்தும் தேங்கிய வண்ணம் உள்ளன. மேலும் கல்யாண மண்டபம், தியேட்டர், மால்கள் போன்ற இடங்களில் இருந்து அதிகளவிலான குப்பைகள் நாள்தோறும் கொட்டப்படுகிறது. இதன்காரணமாகவும் குப்பைகள் சேகரிப்பதில் அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனினும் 21 ஆயிரம் ஊழியர்கள் குப்பைகள் அள்ளும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 220 லாரிகளில் குப்பைகள் அள்ளப்பட்டு வருகிறது. 41 கனரக லாரிகளும், 86 பகுதிகளுக்கு குப்பை அள்ளும் வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

குப்பைகள் அதிகளவில் தேங்கி இருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்பதால் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு குப்பைகள் அள்ளும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி சார்பில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News