முதல்வரான பின்னர் மு. க.ஸ்டாலின் கொண்டாட உள்ள முதல் பிறந்த நாள் விழா
முதல்வரான பின்னர் முதல்பிறந்த நாள் விழாவை முக ஸ்டாலின் நாளை கொண்டாடுகிறார்.;
1953-ம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி கருணாநிதி-தயாளு அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த மு.க. ஸ்டாலின் நாளை மார்ச் 1ம் தேதி தனது 69-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட இருக்கிறார். இதுவரை அவர் கொண்டாடிய பிறந்தநாள் விழாக்களுக்கும் இந்த ஆண்டு அவர் கொண்டாட உள்ள பிறந்தநாளுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. அது என்ன வேறுபாடு.
ஆம் ...அதுதான்... நீங்கள் நினைப்பது சரிதான்... இத்தனை ஆண்டு காலம் மு.க. ஸ்டாலின் தனது பிறந்த நாள் விழாக்களை தி.மு.க.தலைவர் கருணாநிதியின் மகனாக, ஒரு முதலமைச்சரின் மகனாக, சட்டமன்ற உறுப்பினராக, சென்னை மேயராக, அமைச்சராக, தமிழகத்தின் துணை முதல்வராக கொண்டாடி இருக்கலாம். ஆனால் இந்த ஆண்டு நாளை கொண்டாட இருக்கும் பிறந்தநாள் ஏழரை கோடி தமிழ் மக்களின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் கொண்டாட உள்ள முதல் பிறந்தநாள் என்பதுதான் பெருமைக்குரிய விஷயமாகும்.
தமிழக முதலமைச்சர் ஆக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் விழா என்பது தி.மு.க.வினருக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் அவர்கள் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், ரத்ததானம் செய்தும் விழாவை சிறப்பாக கொண்டாட திட்டம் தயாரித்து உள்ளனர்.
மிகவும் முன்னேற்றமடைந்த, கல்வியில் சிறந்த முற்போக்கு சிந்தனை உள்ள தமிழகம் போன்ற ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பதவிஎன்பது கிட்டத்தட்ட ஒரு குட்டி அல்ல சராசரி நாட்டின் அதிபர் பதவி போன்ற பெருமைக்குரிய விஷயமாகும்.
அந்தவகையில் மு. க. ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் ஆவதற்கு எத்தனை ஆண்டுகள் உழைத்தார், என்னென்ன தியாகங்கள் செய்தார், என்பதெல்லாம் பலருக்கு தெரியாத விஷயம்.
அவருக்கு என்ன கலைஞரின் மகன், அதன் காரணமாகவே அவர் எல்லா பதவியிலும் முன்னிறுத்தப்பட்டார் என்றெல்லாம் அரசியல் ரீதியாக அவரை எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தது உண்டு. ஆனால் அவர்கள் கூறியது போல் அவர் திடீரென முதலமைச்சர் ஆகி விடவில்லை. சுமார் 50 ஆண்டு கால உழைப்புக்கு கிடைத்த பரிசாக தான் தமிழ் மக்கள் கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அவருக்கு முதல் அமைச்சர் பதவியை வழங்கி இருக்கிறார்கள்.
கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது ஒரு முறை அவரிடம் செய்தியாளர்கள் ஸ்டாலின் பற்றி கேட்டபோது உழைப்பு, உழைப்பு, உழைப்பு அதன் மொத்த உருவம் தான் மு. க.ஸ்டாலின் என பதிலளித்தார். அந்த அளவிற்கு ஸ்டாலினின் உழைப்பு மீது கருணாநிதிக்கு நம்பிக்கை உண்டு. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற தாரக மந்திரத்தை ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தார். அந்த உழைப்பின் பயனாக தான் கருணாநிதி உயிருடன் இருந்த போதே தி.மு.க. 2016 சட்டமன்ற தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தது. தந்தையின் மறைவிற்குப் பின்னர் நடைபெற்ற முதல் தேர்தலில் தனது அயராத உழைப்பின் மூலம் ஆளுமையை நிரூபித்த மு.க. ஸ்டாலின் தற்போது தமிழக முதல்வர் நாற்காலியை அலங்கரித்து வருகிறார்.
ஸ்டாலின் நினைத்திருந்தால் ஜெயலலிதா மறைவின் போதே அதாவது சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்னர் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட குழப்பம், அசாதாரணமான அரசியல் சூழலின் போது தி.மு.க.விற்கு இருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில் அவர் அப்போதே தமிழக முதலமைச்சர் பதவியை எளிதாக எட்டிப்பிடித்து இருக்கலாம். ஆனால் குறுக்கு வழியில் முதலமைச்சராக அவர் ஒருபோதும் விரும்பவில்லை.விரும்பியதும் இல்லை .
இதனை அவர் பல கட்சி நிகழ்ச்சிகளில் அவர் வெளிப்படையாகவே பேசி இருக்கிறார். நான் கலைஞரின் பிள்ளை. குறுக்கு வழியில் பதவிக்கு வரமாட்டேன். தேர்தலில் அ.தி.மு.க.வை வீழ்த்தி தமிழக மக்களின் பெருவாரியான ஆதரவோடு முதலமைச்சர் ஆவேன் என்று சூளுரைத்தார். அந்த சூளுரை தான் தேர்தலில் அவரை வெற்றி பெற வைத்தது. அதனால் தான் ஸ்டாலின் முதல் அமைச்சராக பதவி ஏற்றபோது அவரது மனைவி துர்கா உணர்ச்சி பெருக்கினால் ஆனந்த கண்ணீர் சிந்தினார்.
நாளை 69- வது பிறந்தநாள் கொண்டாட இருக்கும் ஸ்டாலின் தனது 68-ம் வயதின் கடைசி நாளில் இந்தியாவின் ஒட்டுமொத்த எதிர்க்கட்சித் தலைவர்களையும் தன்பால் ஈர்த்து சென்னையில் தன்னை வாழ்த்துவதற்கு வழிவகுத்து இருக்கிறார். சென்னையில் இன்று நடைபெற்ற ,'உங்களில் ஒருவன்' என்கிற அவருடைய சுயசரிதை நூலை வெளியிட்டு பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி ,கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் மனதார வாழ்த்தி இருக்கிறார்கள்.
அந்த விழாவில் கூட ஸ்டாலின் ஏற்புரை ஆற்றியபோது நான் தமிழக முதல்வராக இருப்பதாக நினைக்கவில்லை உங்களில் ஒருவனாக இருப்பதைத்தான் விரும்புகிறேன். அதனால் தான் எனது சுயசரிதை நூலிற்கு கூட உங்களில் ஒருவன் என பெயரிட்டு உள்ளேன் என கூறியிருக்கிறார்.மக்களில் ஒருவனாக உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்கள் பணி சிறக்க ஒட்டுமொத்த தமிழகமும் அட்வான்சாக இன்றே அவரை வாழ்த்துகிறது.