தாய் சேய் மீட்பு: ''தீரத்தில் மனிதநேயமே ஒளிர்கிறது'' -மு.க.ஸ்டாலின் பாராட்டு
ஆணைவாரி நீர் வீழ்ச்சியின் வெள்ளத்தில் சிக்கிய தாய், சேய் மீட்பு சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்வராயன்மலை பகுதியில் பெய்த தொடர் மழைக்காரணமாக ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் திடிரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அங்கு நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டிருந்த ஒரு பெண் கைக்குழந்தை உள்பட 4பேர் சிக்கி கொண்டனர். அப்போது அவர்கள் காப்பாற்றுமாறு சத்தமிட்டனர்.
மேலும் அங்குள்ளவர் அவர்களை மீட்க நீர்வீழ்ச்சியின் ஒருபுறமாக உள்ள பாறை மீது ஏறியுள்ளனர். கை குழந்தையுடன் தாயையும் மீட்டுள்ளனர். அப்போது பாறை வலுக்கி இரண்டு வாலிபர்கள் ஆற்றில் தவறி விழுந்துனர். பின்னர் அந்த இரண்டு இளைஞர்களும் நீரில் நீந்தி வந்து கரை சேர்ந்தனர். இவர்கள் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இந்த வீரதீர செயலின் வைரல் வீடியோவை கவனித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது டுவிட்டர் பதிவில் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தாயையும் சேயையும் காப்பாற்றியவர்களின் தீரமிக்க செயல் பாராட்டுக்குரியது; அரசால் சிறப்பிக்கப்படுவார்கள். தன்னுயிர் பாராது பிறரது உயிர் காக்க துணிந்த அவர்களது தீரத்தில் மனிதநேயமே ஒளிர்கிறது! பேரிடர்களின்போது பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்! என அவர் பதிவிட்டுள்ளார்.