அகத்தியரால் உலகின் முதல் மண்டை அறுவை சிகிச்சை நடைபெற்ற தோரணமலை கோவில்.
Thoranamalai Murugan-அகத்தியரால் உலகின் முதல் மண்டை அறுவை சிகிச்சை நடைபெற்ற தோரணமலை முருகன் கோவில் பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.;
Thoranamalai Murugan-தென்காசி கடையம் சாலையில் மாதா புரத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ளே சென்றால் பொதிகை மலையின் அடிவாரத்தில் யானை படுத்திருப்பது போன்ற தோற்றத்தில் அமைந்திருக்கும் மலை தான் தோரணமலை. யானையின் தோற்றத்தில் அமைந்திருப்பதால் வாரணமலை என்றும் இதை அழைக்கின்றனர்.
மலையின் அடிவாரத்தில் வேண்டியதை அருளும் வல்லப விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. விநாயகர் கோயில் எதிரே தென்புறத்தில் இயற்கையாய் அமைந்த இரண்டு சுனைகள் உள்ளன. சுனைகளின் கரையில் சித்தர்கள் வழிபட்ட இரண்டு சப்த கன்னிமார் ஆலயம் அமைந்துள்ளது. கோவில் அடிவாரத்தில் சிவன், கிருஷ்ணர், லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் அழகிய சுதை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மலையேறும் முன்பு அரச மரத்தின் கீழ் நாகர் சிலைகள் அமைக்கப்பட்டு அதை சுற்றி வந்து மலை ஏறும் பாதைக்கு சென்றால் அங்கு சிறிய குன்று வடிவத்தில் பாலமுருகனின் அழகிய சுதையால் ஆன சிலை ஒன்று காணக் கிடைக்கிறது. அதை வழிபட்டு விட்டு சில படிகள் ஏறியவுடன் அழகிய மண்டபம் ஒன்று காணப்படுகிறது. இந்த மண்டபம் அருணகிரி நாதர் மண்டபம் என அழைக்கப்படுகிறது.
இதுபோன்று ஆறு இடங்களில் பக்தர்கள் இளைப்பாறுவதற்காக அருணகிரிநாதர் மண்டபம், நக்கீரர் மண்டபம், தேரையர் மண்டபம், அகத்தியர் மண்டபம், பாலன் தேவராயன் மண்டபம், ஔவையார் மண்டபம் என ஆறு மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மலையேறும் பாதை முழுவதும் அரிய மூலிகைகளின் வாசம் நம்முடைய சுவாசத்தையும் உடலில் உள்ள நோய்களையும் நீக்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
ஐந்தாவது மண்டபத்தை தாண்டியவுடன் அழகிய தீர்த்தம் ஒன்று காணப்படுகிறது. இது வறுமைகளை நீக்கி செல்வத்தை தரும் தீர்த்தம் என்பதால் லட்சுமி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. லட்சுமி தீர்த்தம் தாண்டி படிகள் ஏறி மேலே சென்றால் ஔவையார் மண்டபத்தை அடையலாம். இதுதான் ஆறாவதாக அமைக்கப்பட்டுள்ள மண்டபம். இதைத் தாண்டி சில படிகள் ஏறியவுடன் குன்றில் குடியிருக்கும் குமரனின் குகை கோவிலை காணலாம். சுமார் 1193 படிகளைக் கடந்து குகையினில் அழகு ததும்பும் பாலமுருகனின் அழகு முகத்தை கண்டவுடன் படியேறிய களைப்பெல்லாம் நம்மை விட்டு பறந்து செல்கிறது.
அழகிய தோரணமலை முருகனின் குகை கோயிலுக்கு மேலே மலையின் தீர்த்தம் ஆகிய சுனை ஒன்று அமைந்துள்ளது. இந்த சுனையில் எந்த காலத்திலும் நீர் வற்றுவதில்லை இந்த சுனையின் தீர்த்தத்தில் தான் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது மற்றும் இங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளுக்கும் தீர்த்தம் எடுப்பது இந்த சுனை தீர்த்தம் தான். இந்த சுனையின் தீர்த்தத்தில் மருத்துவ குணம் மிகுந்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.
சுனையில் நீராடி சுனையின் பக்கவாட்டில் அமைந்துள்ள அருள்தரும் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு தோரணமலை முருகன் ஆலயம் அமைந்திருக்கும் குகைக்கோவிலுக்கு வரும் வழியில் முருகனின் பாத தரிசனத்தை காணலாம். பின்பு குகையில் குடியிருக்கும் குமரனின் அழகு தரிசனம் காணலாம். தோரணமலை முருகனை தரிசித்து விட்டு செல்லும் பக்தர்களின் குறை எல்லாம் நீங்குவதாக இங்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மலைக்கோவில் குறித்து பல்வேறு ஆச்சரியமான தகவல்களையும் கூறுகின்றனர். அதில் ஒன்றுதான். இந்த மலையில் அகஸ்தியரின் சீடரான தேரையர் என்பவர் தீராத தலைவலியால் அவதிப்பட்ட ஒருவரின் தலையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போது மூளையினுள் தேரை ஒன்று இருப்பதை கண்டார். அந்த சமயத்தில் அனைத்து சித்தர்களும் வைத்தியர்களும் இந்த தேரையை வெளியே எவ்வாறு எடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தனர். தேரையை வெளியே எடுக்கும்போது அது குதித்தால் மூளையின் பெரும் பகுதி கலங்கிவிடும் என்பதால் மிகுந்த கவலையோடு ஆழ்ந்த யோசனையில் இருந்தனர்.
அப்போது தேரையர் ஒரு உபாயம் செய்தார். ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி அந்த நீரை சலசலக்க செய்தார். அப்போது தேரை நீரின் சத்தத்தை கண்டு தவ்வி நீரில் குதித்தது. உடனே தலையை சல்லியகரணி, சாவல்ய கரணி என்னும் மூலிகைகளைக் கொண்டு ஒட்டச் செய்தனர் .இவ்வாறு உலகின் முதல் மண்டை ஓட்டு அறுவை சிகிச்சை நடந்த இடம் தோரணமலை ஆகும்.
இவ்வாறு சித்தர்கள் வாழும் தோரண மலையில் தான் அகத்தியருக்கு முருகன் தமிழை உபதேசித்ததாகவும் கூறப்படுகிறது. தாமிரபரணி மகாத்மியம் எனும் நூலில் இந்த மலையில் தான் அகத்தியர் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைத்து உலகெங்கிலும் இருந்து வந்த சித்தமருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி அளித்ததாக கூறப்படுகிறது. அந்தப் பயிற்சியானது ஆறாண்டு பயிற்சி, 12 ஆண்டு பயிற்சி, 18 ஆண்டு பயிற்சி, 30 ஆண்டு பயிற்சி என நான்கு பிரிவுகளாக பயிற்சி அளிக்கப்பட்டது என்ற குறிப்புகளும் பல நூல்களில் காணப்படுகிறது.
ஆறாண்டு பயிற்சி முடித்தவர்கள் பண்டித வைத்திய மணி எனவும், 12 ஆண்டு வைத்திய பயிற்சி முடித்தவர்கள் வைத்திய கேசரி எனவும், 18 ஆண்டு பயிற்சி முடித்தவர்கள் வைத்திய பண்டித சிரோன்மணி என்றும், 30 ஆண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு உயர்வான வைத்திய பண்டித நாத மணி என விருது பட்டங்கள் இங்கு வழங்கப்பட்டதாகவும் பல்வேறு குறிப்புகள் கூறுகின்றன.இதற்கான ஆதாரங்கள் அகத்திய வைத்திய பஞ்சாட்சர வேதாந்த சூத்திரம் ஆகிய நூல்களில் காணப்படுகிறது.
தோரணமலை பற்றி பல்வேறு நூல்களில் கூறப்பட்டுள்ளது. கோரக்கர் மலை வாகடம் என்ற நூலில் தேரையர் ஆசிரமம் ராக்காயியம்மன் கோவில் அருகே கூப்பிடு தூரத்தில் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தோரணகிரி சித்த மருத்துவ பயிற்சி கூடம் இருந்ததற்கான ஆதாரங்கள் அகத்திய வைத்திய சேகரம் பஞ்சாட்சர வேதாந்த சூத்திரம் ஆகிய நூல்களில் கூறப்பட்டுள்ளது.
திருக்குற்றால மலையில் அமைந்துள்ள திரிகூட பதிஎனும் சிவஞான பீடமானது பஞ்சபூதமும் சமநிலை பெற்ற மாபெரும் புண்ணிய தலமாகும். இத்தலத்தில் பஞ்சபூதமானது சமநிலை அடைவதால் அபூர்வ மூலிகைகள் வளர்கிறது. இத்தலமானது குற்றாலம் மலை ஆரம்பித்து பாபநாசம் பொதிகை வரை அமைந்துள்ளது .இந்தப் பகுதியில் தான் தோரணகிரியும் அமைந்துள்ளது. அதனால்தான் தோரண மலைஎனும் தோரண கிரியை சுற்றிலும் அழுகண்ணி தொழுகண்ணி ஜோதி விருட்சம் எருமை விருட்சம் போன்ற அரிய மூலிகைகள் இங்கு அதிகமாக வளர்கிறது.
மேலும் தோரண மலையில் தான் தேரையர் சமாதி அடைந்துள்ளார். இந்த மழையைச் சுற்றிலும் மருத்துவ குணம் மிக்க நீர் நிறைந்த 64 சுனைகள் அமைந்துள்ளது.
இவ்வாறு சிறப்பு வாய்ந்த தோரணமலையின் பெருமைகளை வெளி உலகத்திற்கு கொண்டு வந்தவர் ஒரு ஆசிரியர். ஆம் .முத்துமாலை புரத்தை சேர்ந்த கே.ஆதிநாராயணன் என்ற தலைமை ஆசிரியர் ஒருவரால் தான் தோரணமலையின் பெருமைகள் அனைத்தும் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது .இந்தக் கோவிலின் பரம்பரை அறங்காவலரான தலைமை ஆசிரியர் கே.ஆதிநாராயணன் என்பவர் அர்ப்பணிப்போடு கடந்த 50 ஆண்டுகளாக இந்த கோவிலின் பெருமைகளை சினிமா தியேட்டரில் திரைப்படங்களின் இடைவேளையின் போது போடப்படும் ஸ்லைடுகள் போடுவதன் மூலமும் ஆங்காங்கே தோரண மலை முருகன் கோவிலில் பெருமைகளை முக்கியமான சுவர்களில் விளம்பரம் எழுதி போடுவதன் மூலமும் இங்கு வரும் பக்தர்களை இன் முகத்தோடு வரவேற்று ஆரம்ப காலம் தொட்டு இங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கொடுத்து 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆன்மிக அரும் பணி ஆற்றிய அவரின் தொண்டு அளப்பரியதாகும்.அவருடைய மறைவிற்குப் பின் அவருடைய மகன் இந்த கோவிலுடைய பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் என்பவரால் இன்னும் அதிகமாக கோவிலுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற தோரண மலையில் ஆன்மீகச் சேவைகள் மட்டுமின்றி பொதுமக்கள் பயன்படும்படி ஆங்காங்கே மருத்துவ விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக இங்கு அரிய நூல்கள் கொண்ட ஆன்மீகச் செம்மல் கே. ஆதிநாராயணன் சநதிரலீலா நினைவு நூலகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்கள் பயன் பெறும்படி பல்வேறு பெரிய நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி போன்றவையும் இங்கு நடத்தப்பட்டு வருகிறது. கல்வி உதவி அன்னதானம் மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகள் தோரணமலை பக்தர்கள் குழு மூலமாக நடைபெற்று வருகிறது.
இங்கு பல்வேறு விழாக்கள் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. முக்கியமாக ஒவ்வொரு கடைசி வெள்ளி தோறும் மழை பொழிய வேண்டி விவசாயம் சிறக்க வேண்டி நடைபெறும் ஸ்ரீவருண கலச பூஜை என்பது இங்கு மிகவும் பிரசித்தம். ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பும் இங்கு சிறப்புடன் கொண்டாடப்படுகிறது பௌர்ணமி தோறும் கிரிவலம் நடக்கிறது.
தேரையர் சித்தருக்கு உகந்த நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் தேரையர் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரம் அன்று உற்சவருக்கு அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தைப்பூசத் திருவிழா இங்கு மிகவும் கோலாகலமாக சிறப்போடு கொண்டாடப்படுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2