திசையன்விளையில் திமுக வேட்பாளர்களை மாற்றக்கோரி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்
திசையன்விளை பேரூராட்சியில் திமுக வேட்பாளர்களை மாற்றக்கோரி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திசையன்விளை பேரூராட்சியில் 13 வார்டுகளுக்கு திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திசையன்விளை பேரூராட்சியின் முன்னாள் திமுக கவுன்சிலர் கிளைக் கழகச் செயலாளருமான சில்வர்ஸ்டர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் வேட்பாளர்களை மாற்றக்கோரி நகர செயலாளர் ஜான் கென்னடிக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தற்போது போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சம்பந்தமில்லாதவர்கள் என்றும், 35 நாட்களுக்கு முன்னர் கட்சியில் இணைந்தவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது என்றும், பாரம்பரியமாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உழைத்தவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றும் கூறி தலைமைக் கழகத்துக்கு வேட்பாளர்களை மாற்றக்கோரி வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து நகர கழக அலுவலகத்திற்கு வந்த நகர செயலாளர் சி.ஜான் கென்னடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டார். அவர்கள் கலைந்து செல்ல மறுக்கவே நகரச் செயலாளர் அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டார்.