வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
வள்ளியூர் சுப்ரமணியசுவாமி திருக்கோயில் அஷ்டபந்தன குடமுழுக்கு நன்னீராட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
வள்ளியூர் சுப்ரமணியசுவாமி திருக்கோயில் அஷ்டபந்தன குடமுழுக்கு நன்னீராட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அமைந்துள்ள மிக பழமையான குடவரைகோவிலான சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அஷ்டபந்தன குடமுழுக்கு நன்னீராட்டு விழா 17ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பாக நடைபெற்றது.அருணகிரிநாதரால் வள்ளியூருரை பெருமானே என பாடப்பெற்ற திருத்தலமானது அகத்தியருக்கு பிரம்ம ஞான உபதேசம் அருளிய காரணத்தினால் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஞானஸ்கந்தன் என அழைக்கபட்டு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியராக காட்சி தருகிறார்.
இந்த திருக்கோவிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக கொரானா தொற்றின் காரணமாக பணிகள் மந்த நிலையில் நடைபெற்ற நிலையில் 17ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதி பெற்று அரசு வழிகாட்டுதலின் படி கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கபட்டது. இந்நிலையில் கடந்த 1ம்தேதி யாகம் பூஜையுடன் தொடங்கிய நிலையில் நேற்று 6ம்கால பூஜையான நேற்றுகாலை 9மணி அளவில் மூலவர் சண்முகர் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டு விமான கோபுரங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
பக்தர்களின் அரோகரா கோஷம் பரவசத்துடன் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. இதில் வள்ளியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். இரவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்று விநாயகர் வள்ளி முருகன் சண்முகர் நடராஜர் வீதியுலா நடைபெற்றது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் அறநிலையத் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளியூர் காவல்துறையினர் செய்திருந்தனர்.