அரசுப் பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்..!
பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்
தென்காசி அருகே இராமலிங்கபுரம் கிராமத்தில் பேருந்தை நிறுத்தாமல் சுமார் 4 கி.மீ பெண்களை அலைக்கழித்த அரசு பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி - திருநெல்வேலி செல்லும் நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள மேலமெஞ்ஞானபுரம் மற்றும் ராமலிங்கபுரம் பகுதியில் இருவேறு சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அடுத்தடுத்துள்ள மேலமெஞ்ஞானபுரத்திற்கு தனியாகவும் இராமலிங்கபுரத்திற்கு தனியாகவும் பேருந்து நிறுத்தம் உள்ள நிலையில் இரமலிங்கபுரம் கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தாமல் அருகில் உள்ள மேலமெஞ்ஞானபுரம் பகுதியில் ஆட்களை இறக்கி விடுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வந்துள்ளது.
இந்நிலையில், இராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த 4 பெண்கள் சுரண்டை பகுதியில் தையல் பயிற்சி படித்து விட்டு, (தடம் எண் 25) வீரகேரளம்புதூரில் இருந்து தென்காசி வரை செல்லும் அரசு பேருந்தில் மீண்டும் ராமலிங்கபுரம் பகுதிக்கு வருவது வழக்கம். அதே போல், இன்று சுரண்டை சென்று விட்டு திரும்பும் போது ராமலிங்கபுரம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் மேலமெஞ்ஞானபுரம் பகுதி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி உள்ளனர். அப்போது ஒரு பெண் இறங்கிய நிலையில் ராமலிங்கபுரம் பகுதியில் பேருந்து நிறுத்தாத குறித்து கேள்வி கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
உடன் வந்த பெண்களை மேலமெஞ்ஞானபுரம் பகுதியிலும் இறக்கி விடாமல் தென்காசி புதிய பேருந்து நிலையம் வரை பேருந்தில் சுமார் 4 கி.மீ அழைத்து சென்றுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் அதே பேருந்து மீண்டும் வீரகேரளம்புதூர் செல்வதற்காக இராமலிங்கபுரம் வந்த போது அரசு பேருந்தை சிறைப்பிடித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் நாக சங்கர் மற்றும் தென்காசி, குற்றாலம் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பணிமனை மேலாளர் சம்பவ இடத்திற்கு வந்து பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தப்படும் என்று எழுதிக் கொடுத்தால் மட்டுமே பொதுமக்கள் கலைந்து செல்வதாக கூறினர்.
இதனைத் தொடர்ந்து போக்குவரத்து பணிமனை மேலாளர், காவல் துறையினர், நடத்திய பேச்சு வார்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து, 2 மணி நேரம் நடந்த மறியல் போராட்டம் முடிவிற்கு வந்ததால் சிறைப்பிடித்த அரசு பேருந்து விடுவிக்கப்பட்டது.