ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணிகள்..!
குண்டாறு அணையில் நிரம்பி வழியும் நீரில் ஆபத்தை உணராமல்சுற்றுலா பயணிகள் குளித்து வருவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.;
தென்காசிமாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. செங்கோட்டை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது குண்டாறு அணை. இந்த அணையானது கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது முழு கொள்ளளவான 36 அடியை எட்டியுள்ளது. நடப்பாண்டில் மட்டும் 2-வது முறை யாக நிரம்பி வழிந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குண்டாறு அணையில் நிரம்பி வழியும் தண்ணீரின் அளவு அதிகரித்து காணப்பட்டு வருகிறது. மேலும் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அணையில் தண்ணீர் வழிந்தோடும் மேல்தளத்தில் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் குளித்து வருவதால் விபத்து ஏற்படும் நிலை காணப்படுகிறது. மேலும் அணைப்பகுதிக்குள் குதித்தும், 'டைவ்' அடித்தும் குளித்து வருகின்றனர். இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்ட ஒரு சில பேர் உயிரிழந்த சம்பவம் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ள நிலையில், மீண்டும் அது போன்ற சம்பவங்கள் நடை பெறாத வண்ணம் ஆபத்தான குளியலிடும் சுற்றுலா பயணிகளை தடுத்து நிறுத்த சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், நிரம்பி வழியும் பகுதிக்கு யாரும் சொல்லாதவாறு தடுப்புகள் அமைத்து கண்காணிப்பதோடு அபராதம் விதித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.