கேரளாவிற்கு ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்த முயன்றவர் கைது

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு 7000 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்

Update: 2024-02-18 11:04 GMT

ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை படத்தில் காணலாம்

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 7000 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்-ஒருவர் கைது.

தென்காசி மாவட்டம், தமிழக-கேரள எல்லைப் பகுதியான புளியரை வாகன சோதனை சாவடி வழியாக டன் கணக்கிலான ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தல் சம்பவம் நடைபெற உள்ளதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், புளியரை போலீசார் சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது, தமிழகத்தில் இருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த கேரள பதிவெண் கொண்ட ஒரு லாரியை மறித்து காவல்துறையினர்  சோதனை செய்தபோது, லாரியின் ஓட்டுனர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தார்பாய்களை அவிழ்த்து சோதனை செய்தபோது, அதில் மூட்டை முட்டையாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து, அந்த வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர்  சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட கோவில்பட்டி பகுதியை சேர்ந்த பட்டுராஜன் என்பவரை கைது செய்து சுமார் 7000 கிலோ மதிக்கத்தக்க ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக புளியரை காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், புளியரை வழியாக சமீப காலமாக ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் என்பது தொடர்ந்து அரங்கேறி வருவதால் போலீசார் அந்த பகுதியில் கூடுதல் காவலர்களை பணியில் அமர்த்தி தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News