ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் கார்மீது மோதி விபத்து..!
தென்காசியில் ஐயப்ப பக்தர்கள் பயணித்த மினி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மினி பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.;
தென்காசியில் ஐயப்ப பக்தர்கள் பயணித்த மினி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மினி பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலைகளில் பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. வளைவுகளில் உள்ள மரங்கள் அகற்றப்பட்டுள்ளதால் அப்பகுதியில் இயக்கப்படும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகிறது.
இந்நிலையில் நாமக்கல்லை சேர்ந்த பக்தர்கள் சிலர் சபரிமலைக்கு மாலை அணிந்து மினி பேருந்து மூலமாக சபரிமலை கோவிலுக்கு சென்று வந்தனர். சுவாமி தரிசனம் முடித்துக் கொண்டு வரும் வழியில் குற்றாலத்திற்கு சென்று குளித்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர்.
அப்பொழுது சிங்கிலிபட்டி பகுதியை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த காரின் மீது ஐயப்ப பக்தர்கள் வந்த மினி பேருந்து மோதியது. இதில் பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐயப்ப பக்தர்கள் ஐந்து பேர் காயமடைந்தனர்.
காயத்துடன் மீட்கப்பட்ட பக்தர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஜேசிபி வாகனம் கொண்டுவரப்பட்டுபேருந்து நிறுத்தப்பட்டது. இந்த விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.