கடையநல்லூர் சாலை விபத்தில் திமுக பிரமுகர் பரிதாபமாக உயிரிழந்தார்
கடையநல்லூரில் லாரி மோதி திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி பாண்டியன் உயிரிழந்தார்.;
சாலை விபத்தில் பலியான கிருஷ்ணசாமி பாண்டியன்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூரை அடுத்த சொக்கம்பட்டி கர்ணம் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி பாண்டியன் (73). இவர் கடையநல்லூர் முன்னாள் திமுக ஒன்றிய செயலாளராகவும், தற்போது மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 24ம் தேதி தென்காசியில் இருந்து சொக்கம்பட்டிக்கு தனது இரண்டு சக்கர வாகனத்தில்சென்று கொண்டிருந்தார்.
அப்போது கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகில், பின்னால் வந்த லாரி கிருஷ்ணசாமி பாண்டியன் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி விழுந்த கிருஷ்ணசாமி பாண்டியன் தலையில் பலத்த காயமடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கடையநல்லூர் போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த கிருஷ்ணசாமி பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கிருஷ்ணசாமி பாண்டியன் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர். பலியான கிருஷ்ணசாமி பாண்டியனுக்கு ரவி, கார்த்திக் என்ற மகன்களும், வசந்தி என்ற மகளும் உள்ளனர்.