கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதன் எதிரொலியாக புளியரையில் கால்நடை துறையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் சூழலில் தமிழக - கேரள எல்லை பகுதியான புளியரை பகுதியில் தமிழக கால்நடை நோய்ப் புலனாய்வு துறையினர் முகாம் அமைத்து கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து, அதற்கு கிருமி நாசினி தெளித்து பின்னர் தமிழக எல்லை பகுதிகளில் அனுமதிக்கின்றனர். மேலும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கோழி, வாத்துகளை ஏற்றி வரும் வாகனங்களை தமிழக எல்லைப் பகுதிக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்படுகிறது.
இது குறித்து கால்நடை மருத்துவர் ஜெயபால்ராஜா கூறுகையில்,கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக எல்லை பகுதியில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் தலைமையில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு ஆய்வாளர் உள்பட 5 பேர் கொண்ட குழுவினர் பணியமர்த்தப்பட்டு தீவிர சோதனைக்கு பிறகு, கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே தமிழக எல்லைக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருதாக தெரிவித்தார்.