கொடிய நோய் தீர்க்கும் ஆலங்குளம் மார்கழி பொங்கல் திருவிழா..!
குருவன்கோட்டை கிராமத்தில் மார்கழிப் பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.;
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டை கிராமத்தில் மார்கழிப் பொங்கல் ஆண்டு தோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளுக்காக கிராம மக்களில் பெரும்பாலானோர் குறிப்பாக பெண்கள், ஒரு வாரத்திற்கு முன்பாகவே விரதம் இருப்பர். குறிப்பிட்ட நாளன்று இளைஞர்கள், இளம்பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து கிராமத்தில் உள்ள அனைத்துத் தெருக்களையும் அலங்கரித்து தெருக்கள் சந்திக்கும் இடங்களில் பந்தலிட்டு பந்தலில் மஞ்சள், கரும்பு தோரணங்கள் கட்டுவர்.
ஒவ்வொரு தெரு சந்திப்பிலும் அந்த தெருவில் வசிக்கும் அனைவரும் ஒன்று கூடி பொங்கலிட்டு அதே இடத்தில் அம்மனை வழிபட்டனர். கிராமத்தில் சுமார் 30 இடங்களில் இந்த பொங்கலிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை இம்மக்கள் முக்கு பொங்கல் எனவும் மார்கழிப் பொங்கல் எனவும் அழைக்கின்றனர். இந்த மார்கழிப் பொங்கல் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கிராமத்தில் நடைபெற்று வருகிறது.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் கொடிய காலரா நோய் இப்பகுதியில் பரவியதால் நூற்றுக் கணக்கான கிராம மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்தனர். வீடுகளில் இருப்போர், வயல் வெளியில் வேலைக்குச் சென்றோர் என பலர் உயிரிழந்தனர். அப்போது கோயில் பூசாரி ஒருவர் வடக்குத்தி அம்மனுக்கு பொங்லிட்டுப் படைத்தால் இந்த காலரா உபாதை நீங்கும் என அருள் வாக்கு கூறினார்.
அதன் பேரில் கிராம மக்கள் அம்மனுக்கு பொங்கலிட்டுப் படைத்த பின்னர் காலரா நீங்கி மக்கள் சுகமாக வாழ்ந்து வருகின்றனர். அது முதல் ஆண்டு தோறும் மார்கழி மாதம் 3 வது செவ்வாய்க்கிழமை பொங்கலிட்டு அம்மனுக்குப் படைக்கும் விழா நடைபெறுகிறது என கிராம மக்கள் கூறுகின்றனர்.