தீபாவளி: டாஸ்மாக் கடைகளில் விற்பனை இலக்கு நிர்ணயம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் 600 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் முக்கிய வருவாய்களில் டாஸ்மாக் வருமானம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் காரணமாவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கிற்கு சாத்தியமில்லை எனவும் கூறப்படுகிறது.
ஆண்டுதோறும் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் ஈட்டித் தரும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக டாஸ்மாக் விளங்குகிறது. கடந்த 2020-21ஆம் நிதியாண்டில் மட்டும் 33,811.14 கோடி ரூபாயை மாநில அரசு ஈட்டியுள்ளது. ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை களைகட்டும்.
இவ்வாறு அதிக வருமானம் ஈட்டும் டாஸ்மாக் நிறுவனத்தில் ஒவ்வொரு வருடமும் முக்கிய பண்டிகையை முன்னிட்டு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படும். அதாவது தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்ய வேண்டிய இலக்கு நிர்ணயம் செய்யப்படும்.
இதேபோல் கடந்த வருடமும் தீபாவளிக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், 431 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் 600 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வருடம் தீபாவளி பண்டிகை அக்டோபர் 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாட்களான சனிக்கிழமை 22-ந்தேதி ரூ.200 கோடி, 23-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ரூ.200 கோடி, தீபாவளி பண்டிகை அன்று ரூ.200 கோடி என மொத்தம் 600 கோடிக்கு விற்பனை செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக டாஸ்மாக் கடைகளில் 10 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை 40 சதவீதம் சாதாரண ரகம் மதுபானங்கள், 40 சதவீதம் நடுத்தர ரக மதுபானங்கள், 20 சத வீதம் உயர்தர மதுபானங்கள் என்று கடைகளில் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விற்பனை இலக்கை எட்டாமல் மதுபானங்கள் குறைவாக விற்பனையாகும் மாவட்டங்களில் அதற்கான காரணங்களை கண்டறிய மண்டல மேலாளர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் அனைத்து மதுபான கிடங்குகளில் உள்ள சரக்குகள், பதிவேடுகள் மற்றும் கோப்புகளுக்கு எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினால் எவ்வித சேதமும் ஏற்படாத வகையில், உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவற்றை பாதுகாப்பான முறையில் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள மதுபான விற்பனைக் கடைகளில் இருப்பில் உள்ள மதுபான பெட்டிகள், பதிவேடுகள் மற்றும் கோப்புகள் ஆகியவை மழை மற்றும் வெள்ள நீரால் பாதிக்கப்படாதவாறு தரையில் இருந்து உயர்த்தப்பட்டு, பாதுகாப்பான முறையில்(?) வைத்து விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.