உதிர்ந்த நட்சத்திரங்கள்

தமிழக தேர்தலில் போட்டியிட்ட சினிமா நட்சத்திரங்கள் ஒருவர்கூட வெற்றிபெற முடியவில்லை

Update: 2021-05-03 05:57 GMT

கமல்,ஸ்ரீப்ரியா 

சினிமா கவர்ச்சி அல்லது சினிமா பிரபலம் அரசியலுக்கு எந்தவிதத்திலும் பயன்தராது என்பதை மீண்டும் இந்த தேர்தல் நிரூபித்துள்ளது.


எம்ஜிஆர்., ஜெயலலிதா போன்றோர் தனி அடையாளமாக உருவெடுத்தவர்கள். எம்ஜிஆர் மக்களின் மனதில் இடம் பெற்றிருந்தார். ஜெயலலிதா சினிமா பிரபலத்துடன் அரசியலுக்கு வந்தாலும் அவருக்கென தனி ஆளுமையை வளர்த்துக்கொண்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிக்காமல் இருந்திருந்தால் தேசிய அரசியலில் அவர் தனிப்பெரும் இடத்தை பிடித்திருப்பார். 


தற்போதைய சினிமா நட்சத்திரங்கள் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாதபோது கொஞ்சம் அரசியலிலும் ஈடுபடுவோம் என்று கொள்கை அடிப்படை அற்ற நிலையில் அரசியல் பிரவேசம் செய்கின்றனர். கமல் போன்ற மஹா நடிகர் கூட அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. அதனால்தான் ரஜினி ஒதுங்கிக்கொண்டாரோ என்னவோ? அதில் அவர் புத்திசாலிதான். அவர் எடுத்த முடிவு சரியானதே.


நடந்து முடிந்த தேர்தலில் கமல்,சீமான், குஷ்பூ, ஸ்ரீப்ரியா,சினேகன், மயில்சாமி மற்றும் மன்சூர் அலி போன்ற சினிமா நட்சத்திரங்கள் வெற்றி பெற முடியவில்லை. கமல், யாருக்கும் எதுவும் புரியாதபடி பேசுவார்; சீமான் உணர்ச்சிமிகுந்து கொந்தளிப்பார் என்ற பேச்சே மக்கள் மத்தியில் இருந்தது. 


குஷ்பூ, திமுகவில் இருந்தார். காங்கிரஸ் போனார். மீண்டும் அங்கிருந்து பா.ஜ.கவுக்கு தாவினார். இப்படி அவரது கொள்கை எந்த அளவுக்கு இருக்கும் என்பதை மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். சீமாரோடு இருந்த மன்சூர், தனி கட்சி தொடங்கி தனியாக போட்டியிட்டார். மயில்சாமி சுயேச்சையாக போட்டியிட்டார். ஆனால், ஒருவர் கூட வெற்றிபெறவில்லை. திருவொற்றியூரில் சீமான் மூன்றாம் இடம் பிடித்தார். கமல், கோவை தெற்கில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். ஆனாலும் வெற்றி பெற முடியவில்லை. 


சினிமா கவர்ச்சியும், சினிமா பிரபலமும் அரசியலுக்கு உதவாது என்பது மீண்டும் கணக்கின் சூத்திரம் போல நிரூபிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News