தமிழ்நாடு அரசை தமிழிசை கேள்வி கேட்க தார்மீக உரிமை இல்லை : அமைச்சர் பதிலடி..!
தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் மற்றும் கோயில் பணிகள் குறித்து கேள்வி கேட்கத் தமிழிசைக்கு எந்த உரிமையும் இல்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்;
”தமிழ்நாடு அரசை கேள்வி கேட்க தமிழிசைக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை".. அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 98 மாணவர்களுக்குச் சான்றிதழ்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "2022-2023 ஆண்டில் 930 கட்டணமில்லா திருமணங்கள் நடைபெற்றுள்ளது. தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு 16,957 திருக்கோவில்களில் ஒருகால பூஜை நடத்தப்படுகிறது. மேலும் 1030 திருக்கோயில்களில் நன்னீராட்டு விழா நடைபெற்று முடிந்து உள்ளது.
1000 ஆண்டுகள் பழமையான கோயில்களில், 143 திருக்கோயில்கள் புனரமைப்பு பணிகளுக்கு எடுத்து கொள்ளப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. 2023-24ல் மேலும் 2 ஆயிரம் கோயில்களில் ஒரு கால பூஜை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 12000க்கும் மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத் தொகை அளிக்கும் ஆட்சியாகத் திராவிட மாடல் ஆட்சி உள்ளது.
தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானாவிற்கும் புதுச்சேரிக்கும் தான் ஆளுநர். அவர் ஒன்றும் தமிழ்நாடு பா.ஜ.கவின் கொள்கை பரப்பு செயலாளர் இல்லை. தமிழிசை ஆளுநராக இருக்கும் மாநிலத்தில் உள்ள கோவில்களில் இது போன்ற முன்னெடுப்புகள் நடைபெற்றுள்ளதா என்பதை முதலில் பார்த்துவிட்டுப் பேச வேண்டும். தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் மற்றும் கோயில் பணிகள் குறித்து கேள்வி கேட்க அவருக்கு எந்த தார்மீக உரிமை இல்லை.
அண்ணாமலையின் பாதயாத்திரை மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதால் இப்போது போராட்டம் நடத்துகிறார்கள். ஆர்ப்பாட்டம், போராட்டம் இவற்றின் மூலம் எங்களது பணிகளை முடக்கி அச்சுறுத்த முடியாது. உருட்டல் மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். சனாதனம், சமத்துவத்தைப் பற்றி தி.மு.க தொடர்ந்து பேசும்” என தெரிவித்துள்ளார்.