வங்ககடலில் உருவாகும் புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த எச்சரிக்கையும் இல்லை
வரும் நாட்களில் மழை முற்றிலும் குறைய தொடங்கும் என சென்னை வானிலை இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
வங்ககடலில் உருவாகும் புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த எச்சரிக்கையும் இல்லை எனவும் வரும் நாட்களில் மழை முற்றிலும் குறைய தொடங்கும் என சென்னை வானிலை இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் (5 .8 கிலோமீட்டர் உயரம் வரை ) நிலவும்
வளிமண்டல சுழற்சி குமரிக்கடல் (1.5 கிலோமீட்டர் உயரம் வரை ) பகுதிவரை நீடிப்பதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை (01.12.2021) கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
டிசம்பர் 02 ஆம் தேதி மற்றும் 03 ஆம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
வீரபாண்டி (தேனி) 12, திருப்புவனம் (சிவகங்கை), பாபநாசம் (திருநெல்வேலி), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), காயல்பட்டினம் (தூத்துக்குடி) தலா 9, மணிமுத்தாறு (திருநெல்வேலி), பரமக்குடி (ராமநாதபுரம்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), மண்டபம் (ராமநாதபுரம்), ஆய்க்குடி (தென்காசி) தலா 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு தாய்லாந்து மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் அந்தமான் கடல்பகுதிகளை வந்தடையும். மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக டிசம்பர் 2 ஆம் தேதி வலுப்பெறக்கூடும்.மேலும் அதனை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்க கடலில் புயலாக வலுப்பெறக்கூடும். மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4 ஆம் தேதி மேலும் வலுப்பெற்று புயலாக வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடல்பகுதிகளை கரையை கடக்க கூடும்.
இதே போல் கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதிகளில் மகாராஷ்டிரா கடல் பகுதிகளை ஒட்டி நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது.
இந்த 2 காற்றழுத்த தாழ்வு பகுதியாலும் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு இல்லை என்றும் மீனவர்களுக்கு மட்டும் எச்சரிக்கை விடப்படுகிறது.
அதன்படி, மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரை, இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நாளை அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
02.12.2021 அன்று தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் பேசக்கூடும்.
03.12.2021 அன்று மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் பேசக்கூடும்.
04.12.2021 அன்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் பேசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்
அரபிக்கடல் பகுதிகள் இன்று, நாளை தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த புவியரசன், வங்க கடலில் உருவாகும் புயலால் தமிழ்நாட்டிற்கு எச்சரிக்கை இல்லை. இன்று, நாளை மழை இருக்கும். வரும் நாட்களில் மழை முற்றிலும் குறைய தொடங்கும்.
வடகிழக்கு பருவமழை கணக்கீடு காலத்தின் படி, அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழ்நாட்டில் 65 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பு அளவான 36 செ.மீ-ஐ விட 83% அதிகம்.
இதே போல் சென்னையில் 115 செ.மீ மழை பதிவாகியுள்ளது, இது இயல்பு அளவான 62 செ.மீ-ஐ விட அதிகம் என தெரிவித்தார்.