மன்னிப்பு கேட்கலனா வட மாவட்டத்துல சூர்யா படம் ஓடாது -பாமகவினர் எச்சரிக்கை

வடமாவட்டத்தில் அதிகம் உள்ள வன்னியர் மக்கள் சூர்யாவின் படத்தை புறக்கணிப்பாளர்கள் -பாமகவினர் எச்சரிக்கை.

Update: 2021-11-22 05:31 GMT

காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த பாமகவினர்.

ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கும், பா.ம.கவுக்கும் இடையே மோதல் வெடித்து வருகிறது. அந்த படத்தில் அந்தோணிசாமி என்ற பெயரை, குருமூர்த்தி என்றும், வன்னியர் கலசத்தையும் காட்டியதால் வன்னியர் மக்களிடம் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ம.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலும் நடிகர் சூர்யா, ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என காவல்நிலையத்தில் பா.ம.கவினர் புகார் அளித்துள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு,ஆரணி நகர காவல் நிலையத்திற்கு இன்று  100க்கும் மேற்பட்ட பா.ம.கவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பா.ம.க செயலாளர் வேலாயுதம் சார்பில் ஒரு புகாரும், வன்னிய சங்க மாவட்ட தலைவர் குமார் சார்பில் ஒரு புகாரும் ஆக 2 புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டன. இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் புகார் மனுக்களை பெற்றுக் கொண்டார். சமீபத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்து அமேசான் நிறுவனம் வெளியிட்ட திரைப்படம் ஜெய்பீம் இந்த திரைப்படம் 1995-ம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைப்பெற்ற உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய சாதியான வன்னியர்களை இழிவுப்படுத்தும் வகையில், படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் கருத்து சுதந்திரம் என்று சொல்லி, ஒரு சமூகத்தை இழிவுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக வில்லனாக இருக்ககூடியவர், பெயர் அந்தோணிசாமி என்ற பெயரை குருமூர்த்தி என்றும், அவரை காட்டும்போது வன்னியர் கலசத்தை காட்டி. எங்கள் சமூகத்தை இழிவுபடுத்தியுள்ளனர். அதேபோல் நீதிமன்றத்தில் குருமூர்த்தி என்று அழைக்காமல், குரு, குரு என்று அழைப்பது நீதிமன்ற சட்டத்திற்கு புறம்பானது. வேண்டுமென்றே ஜெ. குருவை இழிவுப்படுத்துவதாகவும் இந்த படம் உள்ளது என புகாரில் குறிப்பிட்டு இருந்தனர். 

புகார் கொடுத்து விட்டு வந்த பாமக மாவட்ட செயலாளர் வேலாயுதம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,சமீபத்தில் ஓடிடியில் வெளியான ஜெய்பீம் படத்தில் வன்னியர்கள் கொச்சைபடுத்தும் விதமாக இடம் பெற்றுள்ளதை கண்டித்தும் நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா மற்றும் பட இயக்குநர் ஆகியோர் வன்னியர் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் நடிகர் சூர்யாவின் படத்தை ஓட விடமாட்டோம் என்றும் வடமாவட்டத்தில் அதிகம் உள்ள வன்னியர் மக்கள் சூர்யாவின் படத்தை புறக்கணிப்பாளர்கள் என்று  கூறினார்.

Tags:    

Similar News