உண்மையிலேயே பெண்கள் வளர்ச்சியில் அக்கறை காட்டுகிறாரா ஸ்டாலின்?
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் பலகீனத்தை ஸ்டாலின் சரியாக கணித்து குறி வைத்து அடித்திருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து;
உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் ஸ்டாலின் பெண்கள் வளர்ச்சியில் அக்கறை காட்டுகிறாரா என மிகப்பெரிய விவாதமே நடத்தலாம். ஆனால் உள்ளுக்குள் மறைந்துள்ள உண்மை ஸ்டாலினுக்கும், தி.மு.க.,வினருக்கும் மட்டுமே தெரியும்.
அண்ணா, கலைஞர் காலத்திலேயே தி.மு.க. பெண்கள் வளர்ச்சியில் பெரும் அக்கறை காட்டியது என்பது மறுக்கவே முடியாத வரலாற்று உண்மையாகும். அதனால் தற்போதய நகர்ப்புற உள்ளாட்சி பணியிடங்களில் பெண்களுக்கு 50 சதவீத இடங்களை வழங்கி முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பது யாருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. காரணம் பெண்கள் வளர்ச்சியில் அக்கரை காட்டும் அரசியல் பாரம்பரியத்தில் வந்தவர் ஸ்டாலின்.
அவர் அறிவித்ததில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்றே பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் 50 சதவீத ஒதுக்கீட்டை ஸ்டாலின் சும்மா அள்ளிக் கொடுத்து விடவில்லை. மிகவும் நிதானமாக யோசித்தே வழங்கியிருக்கிறார். காரணம் தற்போதய தமிழக சூழலில் தி.மு.க.வை அ.தி.மு.க எதிர்கொள்ள முடியாத காரணம் பெண்களுக்கு வழங்கிய ஒதுக்கீடு தான்.
தி.மு.க.விலோ, தி.மு.க.அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளிலோ பெண்கள் வெளிப்படையான கள அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால் கன்னியாகுமரி முதல் சென்னை வரை அ.தி.மு.க.வை பொறுத்தவரை பெண்கள் பதவியில் இருந்தாலும், களப்பணிக்கு வருவது மிக, மிக குறைவு. அ.தி.மு.க., தலைவர்களின் குடும்ப பெண்கள் நேரடி அரசியலுக்கு வரவே மிக, மிக யோசிக்கின்றனர்.
இது தான் அ.தி.மு.க.,வின் முதல் பலவீனம். இங்கு தான் குறி வைத்து அடித்திருக்கிறார் ஸ்டாலின். தற்போது பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டில், அதாவது பெண்கள் போட்டியிடும் வார்டு கவுன்சிலர் பதவிகளில் மிக அறுதிப்பெரும்பான்மை இடங்களை தி.மு.க., அள்ளி விடும். அதுவும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வாரியாக பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு விவரங்களை கையில் எடுத்து ஆய்வு செய்தால், தி.மு.க. எவ்வளவு துல்லியமாக திட்டமிட்டு காய்நகர்த்தி உள்ளது என்பது புரியும் என அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.
ஆக பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை அள்ளியாச்சு.... மீதம் 50 சதவீதத்தில் தி.மு.க.வும், கூட்டணி கட்சிகளும் குறைந்த அளவு வென்றாலும் கூட மறைமுக தேர்தல் என்பதால் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தலைவர் பதவிகளை தி.மு.க. மிக எளிதில் அறுதிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றி விடும். இது மிகவும் நுட்பமான கை தேர்ந்த அரசியல் கலையாகும்.
கலைஞரின் மகன் தான் என்பதை ஆட்சி நி்ர்வாகத்தில் மட்டுமல்ல... அரசியல் சதுரங்கத்திலும் ஸ்டாலின் நிரூபித்து விட்டார் என தி.மு.க.வினர் பகிரங்கமாகவே கூறுகின்றனர். இதுவரை இந்த கருத்தை அ.தி.மு.க., மறுக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.