தேனி நலம் மருத்துவமனையில் ஏழை நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை
தேனி நலம் மருத்துவமனையில் ஏழ்மை நிலையில் உள்ள நோயாளிகளுக்காக சிறப்பு சிகிச்சை வசதிகள் தொடங்கப்பட்டது.
தேனி நலம் மருத்துவமனையில் மெட்ரோ நகரங்களில் கிடைக்கும் உயர் தொழில்நுட்பங்களுடன் கூடிய மருத்துவ வசதிகள் குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.
இங்கு சர்க்கரை நோய், இருதய நோய், கல்லீரல் நோய் சிகிச்சைகள், பிரசவம், அனைத்து வகை அறுவை சிகிச்சைகள், சிறுநீரக சிகிச்சைகள், எலும்பு முறிவு சிகிச்சைகள், பொதுமருத்துவ சிகிச்சைகள், மூளை நரம்பு சிகிச்சை வசதிகள், வயிற்று பிரச்னைகள், பல் மருத்துவ சிகிச்சை உட்பட ஒரு பெரிய மருத்துவக் கல்லுாரியில் வழங்கப்படும் அத்தனை சிகிச்சை வசதிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கேற்ற உள்கட்டமைப்பு வசதிகளும், நவீன தொழில்நுட்பங்களும் இந்த மருத்துவமனையில் உள்ளன. மருத்துவமனையில் 24 மணி நேரமும் அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஏழ்மை நிலையில் உள்ள அனைத்து பொதுப்பிரிவு நோயாளிகளுக்காக சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது மிக, மிக குறைந்த கட்டணத்தில் ஏழை நோயாளிகள் டயாலிஸ் சிகிச்சை பெற முடியும். அதேபோல் இங்கு ஏழ்மை நோயாளிகளுக்கான சிறப்பு படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இங்கு படுக்கையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு டாக்டர் பீஸ், நர்சிங் பீஸ், படுக்கை வசதி கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து 24 மணி நேரத்திற்கு (ஒருநாள் பகல் மற்றும் இரவு சேர்த்து) ரூ.500 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த சிறப்பு பிரிவுகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது. டயாலிசிஸ் பிரிவினை இந்திய மருத்துவக் கழக கம்பம் பள்ளத்தாக்கு கிளையின் சட்ட செயலாளர் டாக்டர் பிரபாகரன் தொடங்கி வைத்தார். செயலாளர் டாக்டர் சிவா ஏழ்மை நோயாளிகளுக்கான சிறப்பு படுக்கை வசதி பிரிவை தொடங்கி வைத்தார்.
முன்னதாக நலம் மருத்துவமனையின் தலைமை டாக்டர் ராஜ்குமார், தலைமை நிர்வாகி வனிதா ராஜ்குமார், அனைவரையும் வரவேற்றனர். மயக்கவியல் டாக்டர் பிரபாகரன், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் கே.கே.ஜெயராம் நாடார், பாலசங்கா குழும நிர்வாகி கதிரேசன், டாக்டர் முகமதுபாஷித் உட்பட பலர் பங்கேற்றனர்.