டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை ஓய்வூதியதாரர்கள் சமர்ப்பிக்க சிறப்பு முகாம்கள்
டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க மத்திய அரசு சார்பில் மதுரையில் நவ 14- ல், நாகர்கோவிலில் 15-ல் சிறப்பு முகாம் நடக்கிறது
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், தங்களது டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்காக மத்திய அரசு சார்பில் மதுரையில் நவம்பர் 14-ம் தேதியும், நாகர்கோவிலில் 15-ம் தேதியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மத்தியில் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதை ஊக்குவிக்கும் வகையில், தேசிய அளவிலான பிரச்சாரத்தை இந்திய அரசின் பணியாளர் நலன், மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை தொடங்கியது. எந்தவொரு ஆண்ட்ராய்டு மொபைல் போன் வழியாக, ஆயுட்கால சான்றிதழை முக அங்கீகார தொழில்நுட்பம் மூலம் சமர்ப்பிக்கும் புதிய முயற்சியை நவம்பர் 2021-ல் தனிப்பொறுப்புடன் கூடிய மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கிவைத்தார். தற்போது டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதை ஊக்குவிக்கவும், முக அங்கீகார தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்தவும் நவம்பர் 2022-ல் தேசிய அளவிலான சிறப்பு பிரசாரத்தை ஓய்வூதியத் துறை தொடங்கியுள்ளது.
ஓய்வூதியதாரர்கள் எளிதாக வாழ்வதற்காக சிறப்பு முகாம்களை நடத்தி டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் அளிப்பது/ முக அங்கீகார தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பது ஆகிய பணிகளை மேற்கொள்ள பதிவுசெய்யப்பட்ட ஓய்வூதிய சங்கங்கள், ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், இந்திய அரசின் அமைச்சகங்கள், மத்திய அரசு சுகாதார திட்டத்தின் நல மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வரிசையில், மதுரையில் நவம்பர் 14, 2022-ல் சிறப்பு முகாமை மதுரையைச் சேர்ந்த தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் லீக் அமைப்புடன் இணைந்து இந்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறையும், பாரத ஸ்டேட் வங்கியும் ஏற்பாடு செய்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக அலுவலகம், மாதுரம் வளாகம், டாக்டர் அம்பேத்கர் சாலை, மதுரை- 625002 என்ற முகவரியில் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதேபோல, நாகர்கோவிலில் நவம்பர் 15, 2022-ல் நாகர்கோவிலில் உள்ள ஓய்வூதியதாரர்கள் சங்கத்துடன் இணைந்து இந்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறையும் பாரத ஸ்டேட் வங்கியும் சிறப்பு முகாமை நடத்த உள்ளன. ரோட்டரி சமூக மையம், ஆட்சியர் அலுவலகம் அருகே, நாகர்கோவில் – 629001 என்ற முகவரியில் இந்த முகாம் நடைபெறுகிறது. சேமநல நிதி அமைப்பில் உள்ளவர்கள், மற்ற பிற ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட அனைத்து ஓய்வூதியதாரர்களும் இந்த இரண்டு முகாம்களிலும் கலந்துகொண்டு டிஜிட்டல் முறையில் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
1.10.2022 முதல் இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் நிலவரம்:
ஒட்டுமொத்த டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் – 36,38,937
முக அங்கீகாரம் மூலம் ஒட்டுமொத்த டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் – 1,93,768
ஒட்டுமொத்த மத்திய அரசு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் – 14,40,395
முக அங்கீகாரம் மூலம் ஒட்டுமொத்த மத்திய அரசு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் – 1,20,145
இதற்கு முன்னதாக, ஆயுள் சான்றிதழை நேரில் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. இதற்காக வயதான ஓய்வூதியதாரர்கள், வங்கிகளுக்கு வெளியே பல மணிநேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது, தங்களது வீட்டிலிருந்தபடியே பொத்தானை ஒரு கிளிக் செய்வதன்மூலம் சாத்தியமாகிறது. மொபைலில் முக அங்கீகாரம் மூலம் ஆயுள் சான்றிதழை முதல்முறை சமர்ப்பிக்கும்போது, ஆதார் எண், ஓடிபி-யை பெறுவதற்காக மொபைல் எண், ஓய்வூதிய பணம் செலுத்தும் உத்தரவு எண் (பிபிஓ), வங்கி/அஞ்சலகத்தில் உள்ள கணக்கு எண் ஆகியவை தேவைப்படும். மாநில அரசு ஊழியர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும். மாநிலத்தில் கருவூலக அலுவலக வடிவில் வசதிகள் வழங்கப்படும்.
அனைத்து ஓய்வூதியதாரர்களும் டிஜிட்டல் மூலமாக தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்காக மையத்துக்கு செல்ல வேண்டும். மேலும், தற்போதும், எதிர்காலத்திலும் தங்களது வீடுகளிலிருந்தே தங்களது வசதிக்கு ஏற்ப டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க தங்களது ஆண்ட்ராய்டு மொபைல் போனில் முக அங்கீகார செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.