அதிமுகவுடன் இணைவது உறுதி, அடுத்த ஆட்சி அதிமுகதான் -வி.கே.சசிகலா உறுதி

அதிமுகவுடன் இணைவது உறுதி என்றும் அடுத்த ஆட்சி தங்களுடைய ஆட்சி என்றும் வி.கே.சசிகலா உறுதிபட தெரிவித்துள்ளார்.;

Update: 2022-05-18 03:46 GMT

கோப்பு படம் : வி.கே.சசிகலா

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார் சசிகலா. அதன் ஒரு பகுதியாக சிவகங்கை அரண்மனைக்குள் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

வேலுநாச்சியாரின் வாரிசுதாரர்களான ராணி மதுராந்தகி நாச்சியார் வி.கே.சசிகலாவிற்கு வரவேற்பு அளித்தார். அதன் பின்னர் சிவகங்கை பையூர் பகுதியில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள வீர பேரரசி வேலுநாச்சியார் நினைவிடம் வந்து அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் வீரத்தாய் குயிலியின் நினைவுத் தூணிற்கும் மாலை அனிவித்து மரியாதை செய்தார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த வி.கே.சசிகலா, அதிமுகவுடன் இனைவது நிச்சயம் என்றும் அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சிதான் என தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின் போது, திமுகவின் ஓராண்டு சாதனை குறித்த கேள்விக்கு திமுகவினர் சாதனை என சொல்லிக்கொள்கிறார்கள் ஆனால் மக்கள் அதுபோல் நினைக்கவில்லை மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர். இந்த ஆட்சியில் எந்த பயனும் இல்லை என்கிறார்கள். அதுவே என்னுடைய பார்வையும் என தெரிவித்ததுடன் 500 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்தார்கள் ஆனால் ஒன்று கூட செய்யவில்லை. சொல்வதெல்லாம் நன்றாக சொல்கிறார்கள் ஆனால் செய்கை என்பது சரியாக இல்லை, எதுவும் செய்ய வில்லை எனக் கூறினார்.

பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக போராடும் அரசு ஊழியர்கள் குறித்த கேள்விக்கு, அதை செய்ய வேண்டும் என அவர்களே தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தார்கள் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் கண்டும் காணாததுபோல் இருக்கிறார்கள் என கூறினார்.

ப.சிதம்பரம் வீட்டில் ரெய்டு நடைபெறுவது பற்றி கேட்டதற்கு, கருத்து தெரிவிக்க ஒன்றும் இல்லை என்றார்.

மாநில அரசை மத்திய அரசு நசுக்குவதாக மாநில அரசு கூறிவரும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு,

அம்மா இருக்கும்போதும் இந்த அரசு தான் மத்தியில் இருந்தது. ஆனால் அவர் இதுபோல் குறை கூறியது இல்லை, அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து தீவிரமாக கேட்டு பெற்றுக்கொடுத்தார். அதுபோல் திமுக செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை குறைகூறுவது மட்டுமே நம்முடைய வேலை இல்லை. ஓர் ஆண்டு கடந்துவிட்டது, மக்கள் இவர்களுக்குத்தான் வாக்களித்து தேர்ந்தெடுத்தார்கள் அதை விடுத்து மத்திய அரசை குறைகூறிக்கொண்டே எத்தனை ஆண்டுகள் கடத்துவார்கள். இவர்கள் ஆக்கப்பூர்வமாக எதாவது செய்ய வேண்டும். வெறுமென பேசிக்கொண்டு இருப்பதால் எதுவும் ஆகப்போவதில்லை. தேர்தல் நேரத்தில் மாற்றுக்கட்சியினர் குறித்து குறைகூறி பேசலாம் ஆனால் ஆட்சிக்கு வந்தபின் முதலமைச்சர் என்கிற முறையில் மக்களுக்கு எவ்வாறு நல்லது செய்யலாம் என்பதை மட்டுமே சிந்திக்க வேண்டும் என்று கூறினார்.

Tags:    

Similar News