'உங்கள் கடிதம் செல்லாது' : ஓபிஎஸ்-க்கு இபிஎஸ் கடிதம்
ஓபிஎஸ் எழுதிய கடிதத்திற்கு பதில் அளித்துள்ள இபிஎஸ் நீங்கள் தற்போது ஒருங்கிணைப்பாளர் போல கடிதம் எழுதியிருப்பது ஏற்புடையதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதுதான் தற்போதைய அரசியல் களத்தின் விறுவிறு செய்தி. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இரண்டுபேருக்கும் முட்டல் மோதல் மட்டுமே நடக்கவில்லை. அந்தளவுக்கு பிடிக்காத புருஷன் பெண்டாட்டி போல ஆகிவிட்டனர். ஏற்கனவே தர்மயுத்தம் நடத்தி முடித்து பின்னர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைப்பின் கொண்டாட்டங்கள் நினைவுக்கு வருகின்றன.
இந்தநிலையில், ஓபிஎஸ் திடீர் ஞானம் ஏற்பட்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில், உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் வழங்க வேண்டும். அதற்கு கையெழுத்து போட நான் தயாராக உள்ளேன் என்று கூறியிருந்தார். அதெல்லாம் செல்லாது என்று எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்திவிட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், ஓபிஎஸ் கடிதத்துக்கு பதில் சொல்லும் விதமாக எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். 'அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு வணக்கம்' என்று அந்த கடிதத்தை தொடங்கியுள்ளார். அதில், தங்களின் 29.06.2022-ஆம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகளின் வாயிலாகத் தெரிந்துகொண்டேன். பின்னர், திரு. மகாலிங்கம் அவர்கள் வழியாகப் பெறப்பட்டது.
கடந்த 23.06.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில், 1.12.2021 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவால் கொண்டுவரப்பட்ட கழக சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால், அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டது. எனவே, கழக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல.
மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 27.06.2022 அன்று முடிவுற்ற நிலையில், இத்தனை நாட்கள் பொறுத்திருந்து, கழகத்தின் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும், 27.06.2022 அன்று கூட்டப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு தாங்கள் உட்பட அனைவருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு, மொத்தம் உள்ள 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்துகொண்டனர். 4 பேர் உடல்நிலை சரியில்லை என்று தகவல் தெரிவித்திருந்தனர். தாங்கள் அந்தக் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், தற்போதைய தங்களின் இந்தக் கடிதம் ஏற்படையதாக இல்லை என்று ஓபிஎஸ் -க்கு பதில் அளித்துள்ளார்.