சேது சமுத்திர திட்டம்: மன்னார் வளைகுடாவின் பேராபத்து

தமிழக அரசு கொண்டு வந்துள்ள சேது சமுத்திர திட்டம் மன்னார் வளைகுடாவின் உயிர்பன்மயத்திற்கு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு

Update: 2023-01-15 04:16 GMT

சேது கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி 12.01.2023 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரூ. 2427 கோடி செலவில் 02.07.2005 அன்று மதுரையில் அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் இத்திட்டத்தை துவக்கி வைத்தார். இத்திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் ராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள ஆதம் பாலம் மணல் திட்டு பகுதியில் கால்வாய் தோண்டுவதற்கு 17.09.2007ல் தடை விதித்தது.

இதன் பின்னர் உச்சநீதிமன்றத்தின் இத்தடையை, பா.ஜ.க. அ.தி.மு.க ஆகிய கட்சிகளும் தங்கள் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தத் தொடங்கி சேது கால்வாய்க்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். அவர்கள் எதிர்த்ததற்காகவே இத்திட்டத்தை நநிறைவேற்றியே தீர வேண்டும் என்கிற வழியில் தமிழ்நாட்டின் ஜனநாயக சக்திகளும் அரசியல் கட்சிகளும் முடிவெடுத்திருப்பது  குறித்து பெரியாறு பாசன விவசாயிகள் சங்க க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இத்திட்டத்தால் கிடைக்கும் பலன்களைவிட சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு அதிகம் என்பதை அவர்கள் உணர வேண்டும். மன்னார் வளைகுடா, பாக் நீரிணை, பாக் ஜலசந்தி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 167 கி.மீ. தொலைவிற்கு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதில் 89 கி.மீ. நீளத்திற்கு 12 மீட்டர் ஆழத்திற்கு கடல் தூர்வாரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள 21 தீவுகளை உள்ளடக்கிய 10,500 சதுர கி.மீ. அளவிற்கு பரந்து விரிந்திருக்கும் கடற்பரப்பு மன்னார் வளைகுடா உயிர்மண்டலக் காப்பகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி ஆகும். இப்பகுதியில் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், 280 வகை கடற்பஞ்சுகள், 92 வகை பவளங்கள், 22 வகை கடல் விசிறிகள், 160 வகை பலசுனைப்புழுக்கள், 103 வகை முட்தோலிகள், கடல் சங்குகள், பங்குனி ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற 4,223 வகை உயிரினங்கள் வாழும் உயிர்ப்பன்மயம் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்தியக் கடல் பகுதியிலேயே இரண்டாயிரத்துக்கும் அதிகமான மீன் வகைகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தான் உள்ளன. அழிந்துவரும் பாலூட்டி இனங்களைச் சேர்ந்த ஆவுளியாவும், டால்பின்களும் இப்பகுதியில் காணப்படுகின்றன. ஆவுளியா கடற்பசுக்களை பாதுகாக்கும் பொருட்டு 15.02.2022 அன்று தமிழ்நாடு அரசு ஆவுளியா உயிர்மண்டலக் காப்பகத்தை 5 கோடி செலவில் உருவாக்கியுள்ளது.

ஒரு புறம் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் வளைகுடா பகுதியினை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்து விட்டு மறுபுறம் சேது கால்வாய் திட்டம் என்ற பெயரில் வணிக நோக்கிற்காக அப்பகுதியின் உயிர்ப்பன்மயத்தை அழிக்க நினைப்பது எப்படி சரியாகும் ?


இப்பகுதியில் காணப்படும் பவளத்திட்டுகள், கடற்புற்கள், சதுப்புநிலக் காடுகள் ஆகிய மூன்றும்தான் கடல் சூழல் அமைவின் ஆரோக்கியத்தில் மிக முக்கியப் பங்காற்றுபவை. இவை ஒன்றுக்கொன்று பெரிதும் தொடர்புடைய சூழல் அமைவுகள் ஆகும். சதுப்புநிலக் காடுகளில் இருந்து நீரில் கலக்கும் மரத்தின் பாகங்கள் கடற்புற்களுக்கு ஊட்டச்சத்தாக மாறுகின்றன. கடற்புற்களும், பவளப்பாறைகளும் சேர்ந்து பல கடல் வாழ் உயரினங்களுக்கு மேய்ச்சல் இடமாக இருக்கின்றன. இத்தகைய அறிய உயிர்ச்சூழல் அமைவுதான் சேது கால்வாய் திட்டம் என்ற பெயரில் அழியப்போகிறது.

மன்னார் வளைகுடா உயிர்மண்டலக் காப்பகப் பகுதியில் உள்ள 21 தீவுகளை அலைகளின் அழுத்தத்தில் இருந்தும் கடல் அரிப்பில் இருந்தும் அரணாக காத்து நிற்பது தீவுகளைச் சுற்றி இருக்கும் பவளத்திட்டுகள் தான். தொடர்ந்து சட்ட விரோதமாக பவளதிட்டுகள் கடத்தப்படுவதாலும் காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளில் ஒன்றான கடல்மட்ட உயர்வாலும், கடல் நீரோட்ட மாறுபாட்டாலும் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள 21 தீவுகளில் இரண்டு தீவுகள் பூமரிச்சான், விலங்குசாலி ஆகியவை ஏற்கெனவே நீரில் மூழ்கிவிட்டன.

சேது கால்வாய் திட்டத்திற்காக இப்பகுதி கடல் ஆழப்படுத்தப்பட்டால் பல லட்சம் ஆண்டுகளாக பூமியின் பரிணாமத்தில் உருவான இயற்கை அரணாக விளங்கும் பவளத்திட்டு அடுக்குகள் பாதிப்புக்கு உள்ளாவதோடு, ஏற்படப் போகும் அலையின் அழுத்தத்தின் காரணமாக தீவுகள் மூழ்குவதோடு இப்பகுதியின் உயிர்ப்பன்மையமே முற்றிலும் அழிந்துப்போகும் வாய்ப்புள்ளது.

சேது கால்வாய் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதி இயற்கையாகவே கடலின் வண்டல் படிமங்கள் வந்து சேரும் இடமாகும். இத்தரைக்கடல் பகுதியில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு ஆழத்தில் வண்டல்கள் வந்து சேருகின்றன. இவை குறித்தான முழுமையான ஆய்வுகள் இன்னும் செய்து முடிக்கப்படாத நிலையில், இப்பகுதியில் 89 கி.மீ., நீளத்திற்கு கடலை ஆழப்படுத்துவது என்பது பல்வேறு வகையான மீள்புதுப்பிக்கமுடியாத சூழல் பிரச்சனைகளுக்கு வழிவகுத்து விடும்.

வண்டல் படிவுகள் இயற்கையாக உருவாவதால் அவை தொடர்ந்து படிந்துகொண்டே இருக்கும். ஆகவே, கடலை ஆழப்படுத்துதல் / வண்டல் படிவுகள் அகற்றலும் தொடர்ந்து செய்யப்படும். இதற்கான செலவுகளையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.

பொருளாதார கண்ணோட்டத்தில் பார்த்தால்கூட இத்திட்டம் பலனளிக்காது என கடல் போக்குவரத்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக சேது கால்வாயில் 10 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட 30,000 டன்னுக்கு உட்பட்ட கப்பல்கள் மட்டுமே செல்ல முடியும். அதற்குமேல் கொள்ளவு கொண்ட கப்பல்கள் செல்ல முடியாது.

பொதுவாகவே மேற்குக் கடற்கரைகளுக்கிடையே குறைவான எண்ணிக்கையில் மட்டுமே கப்பல்கள் செல்கின்றன. அப்படி 30,000 டன்னுக்குக் குறைவான கப்பல்கள் சேது கால்வாயில் சென்றாலும் சுங்கவரி, பைலட் கப்பல் வாடகை என செலவு செய்ய வேண்டும். மேலும் சேது கால்வாயில் செல்லும்போது கப்பல்கள் தங்கள் வேகத்தைக் குறைத்துப் பயணிக்க வேண்டியிருப்பதால் கூடுதல் எரிபொருள் செலவாகும். சூயஸ், பனாமா போன்ற கால்வாய்கள் பல வார பயணத்தையும், எரிபொருளையும் மிச்சப்படுத்திக் கொடுக்கின்றன. மேலும் அவை நிலத்தைத் தோண்டி அமைக்கப்பட்ட கால்வாய்கள் என்பதை நாம் கருத்தில்கொள்ள வேண்டும். ஆனால், சேது கால்வாயோ 30 மணி நேரத்தையும், 424 நாட்டிகல் மைல் தூரத்தையும் மட்டுமே மிச்சப்படுத்துவதால் கப்பல் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் லாபமிருக்காது.

இத்திட்டத்திற்காக 2012 ஆம் ஆண்டு NEERI நிறுவனம் தயாரித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பல்வேறு உண்மைகளை மறைத்தது. சேது கால்வாயைக் கடந்து செல்லும் கப்பல்களிலிருந்து சிந்தும் எண்ணெய் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த எந்த குறிப்புகளும் இல்லை. சேது கால்வாய் ஆழப்படுத்தும் பகுதியில் ஹைட்ரோ டைனமிக்ஸ், ஜியோமார்ஃபாலஜி ஆகியவற்றால் ஏற்படும் மாற்றம் பற்றி பேசவில்லை என்பன க்ரீன் பீஸ் அமைப்பு முன்வைத்த முக்கியக் குற்றச்சாட்டுகளாகும்.

சேது கால்வாய் திட்டம் வந்தால் தமிழ்நாட்டில் பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரையில் உள்ள 140 மீனவ கிராமங்களை சேர்ந்த லட்சகணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோகும். சேதுசமுத்திர திட்டத்தினால் கடலை ஆழப்படுத்தும் நிறுவன உரிமையாளர்களுக்கும், துறைமுகம் அமைக்கும் அதானி போன்ற தொழிலதிபர்களுக்கும் தான் நன்மையே தவிர, தங்களின் தற்சார்பு பொருளாதரத்தில் இருந்து கூலி தொழிலாளியாக மாற்றப்படப் போகும் லட்சகணக்கான மீனவர்களுக்கு இது வளர்ச்சி இல்லை வீழ்ச்சி.

மேற்கூறிய விஷயங்களைக் கருத்தில்கொண்டு தமிழ் நாடு அரசு இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

பூவுலகின் நண்பர்கள் முன்னெடுத்திருக்கும் இந்த முயற்சிகளை, பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் வழிமொழிகிறது... எதை விடவும் சுற்றுச்சூழல் இன்றியமையாதது என கூறியுள்ளார்.

Tags:    

Similar News